Published : 05 Dec 2022 04:35 AM
Last Updated : 05 Dec 2022 04:35 AM

குமரியில் சீஸன் தொடங்கி 3 வாரமாகியும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை: சுற்றுலா பயணிகள் பாதிப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சீஸன் கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தினமும் காலை மற்றும் மாலை வேளையில் முக்கடல் சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சீஸன் கடைகளுக்கு சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. கடைகள் கட்டுவதில் பேரூராட்சி நிர்வாகம் அக்கறை காட்டி வருகிறது. அதே நேரம் போதிய கழிப்பறை, குளியலறை வசதி இன்றி பக்தர்கள் திணறி வருகின்றனர். சந்நிதி தெரு செல்லும் வழியில் கழிப்பறை செயல்படாமல் உள்ளது. இதுபோல் சூரிய அஸ்தமனப் பகுதி, கடற்கரை சாலையிலும் கழிப்பறை வசதியில்லை.

இது குறித்து சுற்றுலா ஆர்வலர் சங்கரபாண்டியன் கூறியதாவது: கன்னியாகுமரிக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 17-ம் தேதி முதல் சபரிமலைக்கு செல்லும் வழியில் பக்தர்கள் கன்னியாகுமரி வருவதால் கூட்டம் அலை மோதுகிறது. ஆனால், உரிய அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக குடிநீர்,கழிப்பிட வசதி, உடை மாற்றுவதற்கான வசதி போதிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை. சீஸன் காலத்தில் முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடுவதற்கு வசதியாக மிதவைகள் அமைக்கப்பட வேண்டும். படித்துறையில் படர்ந்திருக்கும் பாசிகள் பெயரளவுக்கே அகற்றப்பட்டுள்ளன.

இங்குள்ள ஒரு சில கட்டண கழிப்பிடங்களிலும் சுற்றுலா பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர். சில உணவு விடுதிகளில் விலைப் பட்டியல் வைக்காமல் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து சுற்றுலா பயணிகளிடம் பகல் கொள்ளையடிக்கின்றனர்.

இதனால் இங்கு வரும் பக்தர்கள் பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.எனவே கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதோடு கட்டண கொள்ளை அடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x