

திருநெல்வேலி/ தென்காசி: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதியை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் காவல் ஆணையாளர் அவினாஷ்குமார் மேற்பார்வையில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நகரின் முக்கியப் பகுதிகளில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், டவுன், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாளை. மற்றும் மேலப்பாளையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீஸார் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்பேரில் போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தங்கும் விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு, வள்ளியூர் உட்பட மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு கின்றனர். கூடங்குளம் அணு மின் நிலையம், காவல்கிணறு இஸ்ரோ ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் சுமார் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள், ரயில், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.