

மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்னை நகரின் பேருந்து சாலைகளை லேசர் கருவி மூலம் படம் எடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் 305 கி.மீ. நீளத்தில் 332 பேருந்து சாலைகள் உள்ளன. புதுப்பித்தல், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கு சாலைகளின் அளவு, தரம், வடிவமைப்பு குறித்து துல்லியமான தகவல்கள் இன்றியமையாதது.
அத்தகவல்களை துல்லியமாக அறிந்து, சாலைப் பணிகளை செம்மையாக செய்வதற்கான நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
முதல்கட்டமாக லேசர் கருவி மூலம் 200 பேருந்து சாலைகளை படம் எடுத்து, அவற்றின் முழு விவரங்களை கணினியில் பதிவு செய்ய மாநகராட்சி ஏற்கெனவே திட்டமிட்டது.
அதன்படி, சாலைகளை லேசர் கருவி மூலம் படம் எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து சாலைகளை படம் பிடிக்கும் பணி நடந்து வருகிறது.
200 சாலைகளையும் படம் எடுத்து முடிக்க இன்னும் 20 நாட்கள் ஆகும் என மாநகராட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.