Published : 04 Jan 2014 12:00 AM
Last Updated : 04 Jan 2014 12:00 AM

திமுக கூட்டணியை நெருங்கும் தேமுதிக: ஸ்டாலின் - சுதீஷ் விரைவில் சந்திப்பு?

திமுக கூட்டணிக்கு தேமுதிக வருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருப்பதாகவும் விரைவில் ஸ்டாலின், சுதீஷ் சந்திப்பு நடக்கலாம் என்றும் திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிகவிடம் உள்ள 8 சதவீத வாக்கு வங்கியை குறிவைத்து முக்கியக் கட்சிகள் அனைத்துமே அந்தக் கட்சியை தங்களது கூட்டணிக்குள் கொண்டுவர முட்டி மோதுகின்றன. திமுகவுக்காக எஸ்றா சற்குணம் தூது போகிறார்; வலியப் போய் வாழ்த்து சொல்கிறார் வாசன். தமிழக பா.ஜ.க. தலைவர்களும் விஜயகாந்தை சந்தித்துப் பேசுகிறார்கள். ஆனால் யாருக்கும் மறுப்புச் சொல்லாமல் அத்தனை பேருடனும் கைகுலுக்கி, கூட்டணி ஆவலை தூண்டிக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது விஜயகாந்தை திமுக அணிக்கு இழுப்பதற்கான வேலைகளில் முழுமூச்சாய் இருந்தது மாறன் குடும்பத்தினர்தான். அது முடியவில்லை. அதே நேரத்தில், அந்தத் தேர்தலில் தேமுதிக தனித்து நின்றதாலேயே திமுக கூட்டணி கணிசமான இடங்களைப் பிடித்ததாக அப்போது பேச்சு கிளம்பியது.

தூதுபோன முன்னாள் அமைச்சர்கள்

இந் நிலையில், இப்போதும் திமுக கூட்டணிக்கு தேமுதிகவை கொண்டு வருவதற்கான பொறுப்பு தயாநிதி மாறனிடம் ஒப்படைக் கப்பட்டிருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, ஆற்காடு வீராசாமி, எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாகச் சொல்லப்பட்டது. தேமுதிகவுக்கு ஒன்பது தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் கேட்பதாகக்கூட ஒரு வாரத்துக்கு முன்பு செய்திகள் வட்டமடித்தன. இதற்குப் பிறகுதான் காங்கிரஸும் பா.ஜ.க.வும் விஜயகாந்தை தேடிப் போக ஆரம்பித்தன.

15 தொகுதி, 2 ராஜ்ய சபா சீட்

அதுவரை கொஞ்சம் மெத்தனமாகவே இருந்த திமுக தலைமை, தேசியக் கட்சிகள் தேடிப் போய் பேச ஆரம்பித்ததும் சுதாரித்துக் கொண்டு தூதுவர்களை அனுப்பியதாகச் சொல்கிறார்கள். இதுகுறித்து திமுக வட்டாரத்தில் இருந்து நம்மிடம் பேசியவர்கள், ‘‘பேச்சுவாரத்தைக்காக தலைமையால் அனுப்பிவைக்கப்பட்ட தூதுவர்கள் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷிடம் முதல்கட்டமாக பேசி இருக்கிறார்கள். தங்களுக்கு 15 தொகுதிகளும் அடுத்ததாக காலியாகும் ராஜ்யசபா சீட்களில் இரண்டும் வேண்டும் என்பதுதான் திமுகவுக்கு தேமுதிக இப்போது வைத்திருக்கும் டிமாண்ட். இது தவிர வேறு சில நிபந்தனைகளையும் வைத்திருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை தொடர்கிறது. அடுத்த கட்டமாக ஸ்டாலின் - சுதீஷ் சந்திப்புக்கு திமுக தரப்பில் சிலர் மெனக் கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்த நிமிடத்திலும் இந்தச் சந்திப்பு நடக்கலாம். சந்திப்பு நடந்து விட்டால் கிட்டத்தட்ட கூட்டணி உறுதியானது மாதிரிதான்’’ என்றார்கள்.

தேமுதிக நிலை குறித்து அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி யிடம் கேட்டபோது, ‘‘மீடியாக்களில்தான் ஏதேதோ செய்திகள் வருகின்றன. நாங்கள் திறந்த புத்தகமாக இருக்கிறோம். கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நாளை) நடக்க உள்ளது. அதற்குப் பிறகுதான் கேப்டன் தனது முடிவை அறிவிப்பார். அது வரைக்கும் எந்தத் தகவலும் உறுதியில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x