கனியாமூர் தனியார் பள்ளி நாளை திறப்பு: உயர் நீதிமன்ற உத்தரவின்படி 3வது தளத்திற்கு சீல் 

ஆட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட பள்ளி
ஆட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட பள்ளி
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியின் 3வது தளம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மரணம் அடைந்தார். இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு எரித்தனர். இந்தக் கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால், பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்தப் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை நடத்த, சோதனை அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்புகளை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது. மேலும் டிசம்பர் 5 (நாளை ) முதல் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்றும் உத்தரவிட்டது.

குறிப்பாக, பள்ளியில் உள்ள 'ஏ' மற்றும் 'பி' பிளாக்குகளை பயன்படுத்தலாம் என்றும் ஆனால், 'ஏ' பிளாக்கில் விடுதி இயங்கி வந்த 3-ஆவது மாடியை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. மேலும் விடுதி அமைந்துள்ள தளத்தை மாவட்ட நிர்வாகம் சீல் வைக்க வேண்டும். மேலும் தீவைப்பில் மிகுந்த சேதமடைந்த 'சி' மற்றும் 'டி' பிளாக்குகளை பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி நாளை (நவ.5) முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கனியாமூர் தனியார் பள்ளியின் 3வது தளம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் இன்று (நவ.4) பூட்டி சீல் வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in