தமிழக ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்: முத்தரசன்

முத்தரசன் | கோப்புப்படம்
முத்தரசன் | கோப்புப்படம்
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: "தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்தி கொண்டிருக்கிறார்" என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். "ஆன்லைன் சூதாட்டம் மூலம் 25 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. அது குறித்து விளக்கம் கேட்பது என்கிற பெயரால் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது.

இதே போல பிரதமர் ,குடியரசுத் தலைவர் வந்தால் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வது உள்துறை அமைச்சகம் தான். ஆனால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். அண்ணாமலை மற்றும் ஆளுநர் ரவி ஆகியோர் காவல்துறை அதிகாரிகளாக இருந்தவர்கள். அவர்களுக்கு பிரதமர் பாதுகாப்பு குறித்த நடைமுறை தெரியும். ஆனால் தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் விளக்கம் கேட்டிருப்பது விந்தையாக உள்ளது. ஆளுநர் உள்துறை அமைச்சகத்திடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்.

ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆளுநர் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தி கொண்டிருக்கிறார். ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டிச.29-ம் தேதி ராஜ் பவன் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த இருக்கிறோம்", என்றார்.

- A.கோபாலகிருஷ்ணன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in