Published : 04 Dec 2022 11:32 AM
Last Updated : 04 Dec 2022 11:32 AM

'என்னை வேலை வாங்கும் அமைச்சராக சேகர்பாபு விளங்கிக் கொண்டிருக்கிறார்' - முதல்வர் ஸ்டாலின் 

சென்னையில் முதல்வர் தலைமையில் 31 இணையர்களுக்கு திருமணம் நடந்தது

சென்னை: "ஒரு முதலமைச்சர்தான் அமைச்சர்களை வேலை வாங்குவார்கள். ஆனால் அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சரை வேலை வாங்கக்கூடியவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். வேலை என்றால், ஏதோ தேவையில்லாத வேலை இல்லை. நாட்டுக்கும், மக்களுக்கும் பயன்படக்கூடிய வேலை" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.4) திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.2022-2023ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், "ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும்.

இதற்கான செலவீனத்தைத் திருக்கோயில்களே ஏற்கும்" என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு இன்று முதல்வர் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, வாழ்த்தினார். இணைகளுக்கு மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

திருமணத்தை நடத்திவைத்து முதல்வர் பேசியது:"இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 31 இணையர்களுக்கு திருமணத்தை செய்து வைக்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது உள்ளபடியே பெருமையாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது, எனக்கு மனநிறைவையும் தந்து கொண்டிருக்கிறது. நேற்று முழுவதும் கோவை மாவட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இரவோடு இரவாக வந்து ஏதோ தூங்குவது போல ஒரு தூக்கத்தை தூங்கிவிட்டு, காலையிலே உடனடியாக புறப்பட்டு இங்கே வந்திருக்கிறேன் என்று சொன்னால் நேற்றைக்கு ஏற்பட்ட களைப்புகளெல்லாம் இந்த நிகழ்ச்சியில் என்னை விட்டு நீங்கி போயிருக்கிறது என்கிற அந்த நிலையிலே தான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

இந்தத் துறையின் அமைச்சர் சேகர்பாபுவைப் பற்றி நான் பலமுறை பல இடங்களில், பல நிகழ்ச்சிகளில், பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். அவர் ஒரு "செயல் பாபு" என்று ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். அவரும் அதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். நான் உங்களிடையே வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், இங்கே இருக்கக்கூடிய அமைச்சர்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். கோபித்துக்கொள்ளக் கூடாது. ஒரு முதலமைச்சர் தான் அமைச்சர்களை வேலை வாங்குவார்கள். ஆனால் நம்முடைய அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சரை வேலை வாங்கக்கூடியவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். ஏதோ வேலை வாங்குகிறார் என்றால் தேவையில்லாத வேலையில்லை. நாட்டுக்கு பயன்படக்கூடிய வேலை, மக்களுக்கு பயன்படக்கூடிய வேலை.

அப்படிப்பட்ட ஒரு சிறப்புக்குரிய துறையை பொறுப்பேற்றுக்கொண்டு அவர் பல்வேறு பணிகளை, பல்வேறு திட்டங்களை, பல்வேறு சாதனைகளை, இதுவரையில் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றில் இந்து சமய அறநிலையத் துறைக்கு இப்படிப்பட்ட சாதனை எங்கேயாவது நடந்திருக்கிறதா? என்று கேட்டால், தைரியாமாக, தெம்பாக சொல்லலாம், இல்லை தமிழ்நாட்டில் மட்டும் தான் நம்முடைய சேகர்பாபு வைத்துக் கொண்டிருக்கக்கூடிய அந்தத் துறைதான் ஆற்றிக் கொண்டிருக்கிறது என்று கம்பீரமாக நம்மால் சொல்லமுடியும்.

இங்கே எனக்கு முன் வரவேற்புரை ஆற்றிய துறையினுடைய செயலர் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார். இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் பல்வேறு கல்லூரிகளை நம்முடைய அரசு தொடங்கியிருக்கிறது. கொரோனோ நோய்த்தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில் நோயாளிகளின் உறவினர்களுக்கு உணவு இலவசமாக வழங்கக்கூடிய பணியையும் இந்தத் துறை செய்தது உங்களுக்கெல்லாம் நினைவில் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் 47 கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை உரிமையை நாம் மீட்டுத் தந்திருக்கிறோம். மேலும் பல கோயில்களிலும் இதை விரிவுபடுத்த திட்மிட்டிருக்கிறோம். பெண் ஒருவரை அர்ச்சகராக நியமித்திருக்கிறோம். கோயில் பொது சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம். இது மிகப் பெரிய வரலாறு.
எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கக் கூடிய வகையிலே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனங்களைச் செய்து முடித்திருக்கிறோம். சமத்துவத்தை விரும்பாத சில சக்திகளின் மூலமாக, எத்தனை தடைகள் வந்தாலும், தொடர்ந்து அதற்கான சட்டப் போராட்டத்தையும் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இத்தனையும், இதற்கு மேலாக இன்னும் பல, இந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த ஒரு துறையில் மட்டும் செய்யப்பட்டிருக்கக்கூடிய சாதனைகள். அதனால்தான் இன்றைக்கு அந்தத் துறையினுடைய அமைச்சராக இருக்கக்கூடிய சேகர்பாபு இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல, எல்லா நிகழ்ச்சிகளிலும், செயல்பாபு, செயல்பாபு என்று நாம் அழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இதையெல்லாம் குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் சேற்றை வாரி இறைக்கிறார்கள். பொய் பித்தலாட்டத்தை அவர்கள் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மதத்தை வைத்து நம் மீது இன்றைக்கு பல பழிகளை, குற்றங்களை, குறைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டால், எந்த ஆதாரமும் கிடையாது. நம்மை பொறுத்தவரைக்கும் நாம் அண்ணா வழியில், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணக்கூடியவர்கள். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற அந்த நிலையில் நாம் நம்முடைய பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

அதனுடைய அடையாளம்தான் இன்று ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்திருக்கக்கூடிய 31 இணையர்களுக்கு, மணவிழா நிகழ்ச்சியை நாம் நடத்தி முடித்திருக்கிறோம். அறநிலையத் துறையின் சார்பில் இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்போடு, கட்டுப்பாட்டோடு, எழுச்சியோடு இங்கே நடந்திருக்கிறது. இந்த 31 பேர் மட்டுமல்ல, இன்றைக்கு 217 இணையர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறையின் சார்பில் மணவிழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் மறந்துவிடக் கூடாது மன்னராட்சிக் காலமாக இருந்தாலும் சரி, மக்களாட்சிக் காலமாக இருந்தாலும் சரி, கோயில்கள் என்பது மக்களுக்காகத்தான். அது எந்த ஆட்சியாக இருந்தாலும் கோயில்கள் என்பது மக்களுக்காககத்தான். கோயில்கள் ஒரு சிலருடைய தனிப்பட்ட சொத்து அல்ல. அந்த நிலையை மாற்றத்தான் நீதிக்கட்சிக் காலத்தில் இந்தத் துறை உருவாக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அதிக திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. அந்த குடமுழுக்கு யாருடைய ஆட்சி காலத்தில் அதிகமாக செய்யப்பட்டது என்றால் தலைவர் கலைஞருடைய ஆட்சி காலத்தில்தான் அதிகம் குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது.ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய பெருமை நம்முடைய முதல்வராக இருந்த கலைஞருக்குத்தான் உண்டு.பூசாரிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது கழக ஆட்சி காலத்தில்தான். அந்த வழியில்தான் இப்போது நம்முடைய அரசு சேகர்பாபு பொறுப்பேற்றிருக்கக்கூடிய இந்த துறையின் சார்பில் நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு தன்னுடைய சாதனையை செய்து கொண்டிருக்கிறது.

கோயில் சீரமைப்புப் பணிகளை இதுவரை இல்லாத அளவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அமைச்சர் ஒவ்வொரு கோயிலுக்கும் நேரடியாக போய்க்கொண்டிருக்கிறார். எப்படி போகிறார்? விமானத்தில் போனால்கூட இவ்வளவு வேகமாக போக முடியாது. அவர் இதற்காக ஸ்பெஷலாக விமானம் வைத்திருக்கிறாரா? என்று சந்தேகபடக்கூடிய அளவிற்கு, ஆச்சரியப்படக்கூடிய அளவிற்கு, அதிசயப்படக்கூடிய அளவிற்கு மூன்று மணிக்கு விடியற்காலையில் எங்கேயாவது இருக்கிறார். இங்கே ஆறு மணிக்கு சென்னையில் இருக்கிறார். அலுப்பில்லாமல், சலிப்பில்லாமல், அவர் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய பொறுப்பை நம்முடைய அரசுக்கு பெருமை தேடித் தரக்கூடிய வகையில் அவர் ஆற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காக நான் அரசின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வாழ்த்தை, பாராட்டுக்களை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இது ஏதோ எங்களுக்கு புதுசல்ல, இப்போதும் மட்டுமல்ல, எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள். இன்றைக்கு ஆட்சி என்கின்ற அந்த அதிகாரம், மக்கள் நம்மிடத்தில் நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். ஆகவே, மக்களுடைய எதிர்பார்பிற்கு ஏற்ற வகையில், அனைவருக்குமான அரசாக இந்த அரசுசெயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதை நன்கு உணர்ந்த காரணத்தால்தான் தமிழ்நாட்டு மக்கள் ஐந்து முறை கலைஞர் கையில் ஆட்சியை ஒப்படைத்தார்கள். இந்த ஆட்சியை, ஆறாவது முறையாக அவருடைய மகன் இந்த ஸ்டாலின் இடத்தில், யாரிடத்தில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற வகையில் நாம் நம்முடைய கடமையை ஆற்றி வருகிறோம்.

நாம் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், வெற்றி என்ற அந்த செய்தி வந்தவுடனே, நாம் ஆட்சியில் அமரப் போவதற்கு முன்னாலேயே, தேர்தல் செய்திகள், வெற்றி நிலவரங்கள் எல்லாம் வந்து கொண்டிருந்தபோது நான் தலைவருடைய நினைவிடத்திற்கு சென்றிருந்த நேரத்தில் பத்திரிகை நிருபர்கள் என்னை சூழ்ந்து கொண்டு, என்னிடத்தில் கேள்வி கேட்ட நேரத்தில், ஒரே வரியில் சொன்னேன். இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்த்து, வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும், வாக்களிக்காதவர்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு வாக்களிக்க தவறிவிட்டோம் என்ற வருத்தப்படக்கூடிய அளவிற்கு நம்முடைய ஆட்சி செயல்படும் என்று நான் அப்போதே நம்பிக்கையை தெரிவித்தேன். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றக்கூடிய வகையில் நாம் நம்முடைய கடமையை ஆற்றி வருகிறோம்.

இங்கே மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும், மணமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உங்கள் குழந்தைகள் ஒன்றோ, இரண்டோ நிறுத்திக்கொள்ள வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டுக்காக மத்திய அரசு, மாநில அரசு எவ்வளவோ செலவு செய்து நிதியை ஒதுக்கி பிரச்சாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பெல்லாம், நாம் இருவர், நமக்கு மூவர் என்று சொன்னோம். அது படிப்படியாக குறைந்து நாம் இருவர், நமக்கு இருவர். இப்பொழுது நாம் இருவர், நமக்கு ஒருவர், நாளைக்கு இதுவும் மாறலாம், நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர். நான் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை. இப்படி எல்லாம் பிரச்சாரம் இருக்கிறது. இதையெல்லாம், சீர்தூக்கிப் பார்த்து, நாட்டினுடைய நன்மை கருதி, குடும்ப சூழ்நிலையை கருதி, நீங்கள் உங்கள் செல்வங்களைப் பெற்று அதற்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரத்தில், இல்லற வாழ்வில் நீங்கள் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், சமத்துவத்தை, சமூகநீதியை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஏதோ முதலமைச்சராக அல்ல, உங்களுடைய தந்தை என்கின்ற அந்த இடத்தில் இருந்து உங்களை அன்போடு கேட்டு, புரட்சிக்கவிஞன் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய், வாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க, விடைபெறுகிறேன்" என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x