Published : 04 Dec 2022 09:00 AM
Last Updated : 04 Dec 2022 09:00 AM

எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு நிலையை கடைபிடிக்கக் கூடாது - மனம் திறக்கிறார் மூத்த காங்கிரஸ் தொண்டர் அமெரிக்கை நாராயணன்

சென்னை: பரபரப்புக்குப் பஞ்சமில்லாத தமிழ்நாடு காங்கிரஸ், கடந்த மூன்றரை ஆண்டுகளாக கே.எஸ்.அழகிரி தலைமையில் சப்தமில்லாமல் இருந்தது. ஆனால், கடந்த நவ. 15-ம்தேதி தொண்டர்கள் மோதலால் சத்தியமூர்த்திபவன் வளாகமே போர்க்களமாக மாறியது. அன்றிலிருந்து தமிழக தலைவர்கள் டெல்லி செல்வதும், வருவதுமாக பரபரப்பாகியுள்ளது. இதற்கிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் மூத்த தொண்டர் அமெரிக்கை நாராயணன் நன்றி தெரிவித்தது, காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரை ‘இந்து தமிழ் திசை' சார்பில் நேரில் சந்தித்தோம். அவரது பேட்டியின் சுருக்கம் வருமாறு:

காங்கிரஸ் தொண்டரான நீங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து இருப்பது பற்றி...?

நான் பரம்பரை காங்கிரஸ்காரன் இல்லை. இருக்கும் கட்சிகளில் நல்ல கொள்கை உள்ள கட்சி என்பதால், காங்கிரஸில் இணைந்தேன்.மகாத்மா காந்தி வெளிநாடுகளில் இருந்துவிட்டு நாடு திரும்பியபோது, காங்கிரஸ் கட்சியை கருவியாக உபயோகித்துக் கொண்டார். மோடியை நான் தீவிரமாக எதிர்த்து இருக்கிறேன். அதே நேரத்தில், அவர்தூய்மை இந்தியா இயக்கத்தை கொண்டுவந்தபோது, அதை ஆதரித்து, எங்கள் தெருக்களை தூய்மைப்படுத்தி இருக்கிறேன். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு நிலையைக் கடைப்பிடிக்கக் கூடாது. நல்லது செய்தால் பாராட்டுவேன். குறைகள் இருந்தால், அதை எதிர்த்து விமர்சித்து வருகிறேன்.

திமுகவும், காங்கிரஸூம் கூட்டணியில் இருந்தாலும், கொள்கை ரீதியாக முரண்படுகிறதே?

கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டுமே. அதன் பிறகு விமர்சிக்க வேண்டியதுதான். திமுக சீட் கொடுக்காவிட்டால், அவர்களுக்குத்தான் கஷ்டம். கூட்டணியால் நாங்கள் பல இடங்களில் வென்றிருந்தாலும், பெரிய பயன் திமுகவுக்குத் தான். அவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். ஒரு கட்சி வலிமையாக இருந்தால்தான், எந்தக் கட்சியும் கூட்டணிக்கு அழைப்பார்கள். காங்கிரஸ் தனதுநிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் எல்லா சமூகத்தினருக்காகவும் போராட வேண்டும். பூநூலை அறுப்பேன் என ஒருவர் கூறியபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்காகவும் குரல் கொடுப்பதுதான் மதச்சார்பின்மை. கூட்டணிக்காக அமைதி காப்பது மதச்சார்பின்மை இல்லை.

மூப்பனாரும், வாழப்பாடி ராமமூர்த்தியும் இன்று உயிரோடு இருந்திருந்தால்...?

மக்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்டதால் 1996-ல் மூப்பனார் பெரிய தலைவரானார். ஆனால், 2001-ம் ஆண்டுக்குள் அந்தக் கட்சியை அவரால் சிறப்பாகக் கொண்டுசெல்ல முடியவில்லை. வாழப்பாடி ராமமூர்த்தியிடம் எதிர்ப்பு குணம் உண்டு. 1991-96 காலகட்டத்தில் எதிர்க்கட்சியாக சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால், அடுத்த நிலைக்குச் சென்று, ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க முயற்சிக்கவில்லை. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில், ஏராளமான நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அவற்றை மக்களிடம் கொண்டு செல்லவில்லை.

காங்கிரஸ் தேசியத் தலைவர் தேர்தலில் ப.சிதம்பரம் ஏன் போட்டியிடவில்லை?

ப.சிதம்பரம் ஒரு சிறந்த மனிதர், திறமையானவர். நல்ல பேச்சுத் திறமை உள்ளவர். தலைசிறந்த பொருளாதார நிபுணர். அவர் நினைத்திருந்தால், தமிழகத்தில் காங்கிரஸ்ஆட்சியை அமைத்திருக்க முடியும். அவர் அதைச் செய்யாமல் போனது, எனக்கு வருத்தம். ஆனால், அவர் தொண்டர்களையும் பார்ப்பதில்லை. மக்களையும் மதிப்பதில்லை.

ஆர்எஸ்எஸ்காரர்கள் பிரியாணி, குவார்ட்டர், பணத்துக்கு ஆசைப்படுவதில்லை. அவர்கள் கொள்கையில் பிடிப்பு உள்ளவர்கள். காங்கிரஸ் தொண்டர்களிடம் கொள்கை பிடிப்பு இல்லை என்று கே.எஸ்.அழகிரி கூறி இருக்கிறாரே?

நல்லது யாரிடம் இருந்தாலும், அதைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. காங்கிரஸ் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால், தொண்டர்களுக்கு எதுவும் செய்யவில்லை. தொண்டனால் தனது நேரத்தையும்,உழைப்பையும் கட்சிக்கு கொடுக்க முடியும். பணத்தைக் கொடுக்க முடியாது. அவர்களை கட்சி அங்கீகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x