Published : 04 Dec 2022 05:10 AM
Last Updated : 04 Dec 2022 05:10 AM

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் அவதி - நுகர்வோர் வசதிக்காக புதிய இணையதளம்

சென்னை: மின்வாரியத்தின் சர்வர் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதால், ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் நுகர்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நுகர்வோர் வசதிக்காக புதிய இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின்கட்டணம் செலுத்த முடியும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மின்நுகர்வோர் அனைவரும் ஒரே சமயத்தில் மின்வாரிய இணையதளத்தில் மின் இணைப்புடன், ஆதாரை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மின்வாரிய இணையதளத்தின் சர்வர் முடங்கியது. அத்துடன், மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, நவ.28-ம் தேதி முதல் இம்மாதம் 31-ம் தேதி வரை மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வர் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதால், ஆன்லைன் மூலம் ஆதாரை இணைக்க முடியாமல் நுகர்வோர் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நுகர்வோரிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து மின்வாரியம் தனது சர்வரின் திறனை அதிகரித்துள்ளது. ஒரே சமயத்தில் பலர் ஆதாரை இணைக்க முற்படும்போது ஒருசில நேரங்களில் சர்வர் இணைப்பு துண்டிக்கப்படும். ஒருமுறை சர்வர் இணைப்பு கிடைக்கவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து முயற்சித்தால் இணைப்பு கிடைக்கும்.

மேலும், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தைச் செலுத்த முடியும். எனவே, ஆன்லைனில் பணம் கட்டுவோர் முதலில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். முன்னர், ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டியிருந்தது. தற்போது அது தேவையில்லை’’ என்றனர்.

இந்நிலையில், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் புதிய இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது.

அதன்படி, https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்தில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை எளிதில் இணைக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x