Published : 04 Dec 2022 04:41 AM
Last Updated : 04 Dec 2022 04:41 AM

மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1,500-ஆக உயர்வு - தமிழகம் முழுவதும் 4.39 லட்சம் பயனடைவர்

சென்னையில் நேற்று நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் க.பொன்முடி, பி.கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன் உள்ளிட்டோர்.

சென்னை: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39,315 பேருக்கான ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு விருது, சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பரிசு வழங்கினார். `நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மடிக்கணினியுடன், வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி முதல்கட்டமாக 100 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதையொட்டி, 5 மாற்றுத் திறனாளிகளுக்கு மடிக்கணினிகளை முதல்வர் வழங்கினார்.

இதேபோல, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 6 புதிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனங்களையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பின்னர், மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்களை வழங்கியதுடன், ஊதா அங்காடி மற்றும் நவீன செயற்கை உபகரணங்களுக்கான கண்காட்சியை முதல்வர் திறந்துவைத்துப் பார்வையிட்டார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படக்கூடாது என்ற நோக்குடன், பல்வேறு நலத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

விளையாட்டு வீரர் மாரியப்பன் தனது குறைகளை இளம் வயதிலிருந்தே எதிர்கொண்டு, தடைகளை வெற்றித் தடங்களாக மாற்றி, தற்போது தேசத்துக்கே பெருமையைத் தேடித்தந்துள்ளார். அவரைப்போல, தடைகளை வென்று சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகள் பலர் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

வருவாய்த் துறை மூலம் ஓய்வூதியம் பெற்றுவரும், கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39,315 பேருக்கான ஓய்வூதியம், ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500-ஆக உயர்த்தி, ஜனவரி 1-ம் நாள் முதல் வழங்கப்படும். இதன்மூலம், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.263 கோடியே 58 லட்சம் கூடுதலாக செலவாகும். உலக மாற்றுத் திறனாளிகள் நாளில், உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த விழாவில், அமைச்சர்கள் க.பொன்முடி, பி.கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன், எம்எல்ஏ எழிலன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலர் ஆர்.ஆனந்த குமார், ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலத் தலைவர் டி.வில்சன், பொதுச் செயலாளர் பி.ஜான்சிராணி ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மாதம் ரூ.500 ஓய்வூதிய உயர்வு எங்கள் தொடர் போராட்டத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. இதை வரவேற்கிறோம். அதேசமயம், இது போதுமானதாக இல்லை. ஏனெனில், அனைத்துப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே, ஓய்வூதியத்தை அதிகரிக்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x