Published : 04 Dec 2022 04:20 AM
Last Updated : 04 Dec 2022 04:20 AM
கள்ளக்குறிச்சி: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் மேம்பாலம் கட்டும் பணியால் விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல்நாளுக்கு நாள் அதிகமாகிறது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பில் இருந்து புதுச்சேரி வரை 29 கி.மீ நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1,013 கோடியில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணியின் ஒரு அங்கமாக, விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பில் 60 மீட்டர் நீளத்தில் 25 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேம்பாலப் பணிகளால் பேருந்து போக்குவரத்து வழித்தடம் மாற்றப்பட்ட போதிலும், சென்னையில் இருந்துதென் மாவட்டங்கள் செல்லும் வாகனங்கள் ஜானகிபுரம் சந்திப்பை கடந்துதான் செல்ல வேண்டும்.
ஜானகிபுரம் சந்திப்பு அருகே ரயில்வே பாலமும் உள்ளது. இதனால் வழக்கமாகவே வாகனங்கள் இப்பகுதியில் சற்று மெதுவாககடந்து செல்லும். தற்போது நடைபெறும் பணியால் இப்பகுதியில் கூடுதல் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
போக்குவரத்து நெரிசலை தீர்க்க, விழுப்புரம் ஆட்சியர் மோகனும் அப்பகுதியில் கடந்த வாரம் பார்வையிட்டு, பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகைகளை கூடுதலாக வைக்க உத்தரவிட்டார். எதிரில் வரும் வாகனங்கள் தெரியும்அளவுக்கு தற்போது வைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் அளவை குறைத்து, குறைந்த உயர தடுப்புகள் அமைக்கவும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த தற்காலிக சிறிய அளவிலான வேகத்தடைகள் வைக்கவும் அறிவுறுத்திச் சென்றார்.
இதைத் தொடர்ந்து வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனாலும், ஜானகிபுரம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள்அதிகமாகி வருகிறது. இந்த சிறு பகுதியை கடக்க குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஆகிறது. இதனால் பயண நேர விரயம் மற்றும் எரிபொருள் விரயமாவதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
வாகன நெரிசலைத் தொடர்ந்து,விழுப்புரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள எல்லீஸ்சத்திரம் சாலை வழியாக மாற்றுப் பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த வழியே விழுப்புரம் பழைய சாலையில் வாகனங்கள் சென்று திருச்சி சாலையைப் பிடித்து செல்கின்றன. ஆனாலும்பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட போக்குவரத்து போலீஸாரிடம் பேசியபோது, “மேம்பாலப் பணி நடைபெறுவதால் இந்தச் சிக்கல். பாதுகாப்பு கருதியே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வார நாட்களைவிட சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை மார்க்கத்தில் இருந்து திருச்சி மார்க்கமாக அதிக வாகனங்கள் செல்லும்போதுபோக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி திங்கள்கிழமை காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பாலப்பணிகள் முடிவடைந்தால்தான், அப்பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்ல முடியும்” என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT