

சென்னை: சென்னை அசோக் நகர் அருகே ரூ.39 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தலைமை அலுவலகம் கட்டும் பணிகள் நிறைவு பெற உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மத்தியஅரசின், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வாழ்வாதார சேவைமையம் மற்றும் ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டல் சார்பில் சென்னைகிண்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி 15 மாற்றுத் திறனாளிகளுக்கு பணிஆணைகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை அசோக்நகர் அருகே ரூ.39 கோடி செலவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரம்மாண்ட தலைமை அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.அதற்கான பணி முடியும் நிலையில்உள்ளது. இந்த கட்டிடத்தில் மாற்றுத் திறனாளிக்கென செயற்கை உபகரணங்களை தயாரிக்கும் பணிகள், திறன் மேம்பாட்டு பயிற்சி, மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்படும். விரைவில் இக்கட்டிடத்தை முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.
ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது என்பது இயலாத காரியம். கடந்த ஆட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்கள் எம்ஆர்பி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் அரசாங்கம் அவர்களை பணி நிரந்தரம் செய்ய முடிவு எடுக்கும். இதைவிடுத்து போராட்டங்கள் நடத்துவது பயனற்றது என்றார்.
இந்நிகழ்வில் சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார், மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் மண்டல இயக்குநர் பி.வி.எஸ்.சேஷா சாரி, மாற்றுத் திறனாளிகளுக்கான சென்னை தேசிய வாழ்வாதார சேவை மையம் துணை இயக்குநர் சங்கீதா, ஐடிசி கிராண்ட் சோழா தென்மண்டல பொது மேலாளர் ஜூபின்சோங்கட்வாலா பங்கேற்றனர்.