

வண்டலூர்: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகும் விடுதலை படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு சண்டை காட்சியில் நடித்து வந்த பயிற்சியாளர் உயிரிழந்தார்.
தமிழக சினிமாவில் பல பிரமாண்டமான படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தற்போது நடிகர்சூரியை வைத்து ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாகக் கொண்டு விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, கவுதம்மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பல இடங்களில் எடுக்கப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி மையம் அருகே சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டன. திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக கிங் கேசவன் என்ற ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் 8 நபர்களுடன் 30 அடி உயரத்தில் ரோப் கயிறு மூலம் குதிக்கும் சண்டை காட்சி எடுக்கப்பட்டது.
இதில் ஜாபர்கான்பேட்டை திருநகர், பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (59) சண்டைக்காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது மேலிருந்து கீழ்குதிக்கும் காட்சிக்கு கிரேன் ரோப்பெல்ட் உடலில் கட்டிக் கொண்டு குதித்தார். அப்போது எதிர்பாராத விதமாக உடலில் கட்டி இருந்த ரோப் பெல்ட் அறுந்ததில் 30 அடிஉயரத்தில் இருந்து விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர்கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் உடல் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் படக்குழுவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.