பனிப்பொழிவு அதிகரிப்பால் திண்டுக்கல்லில் மல்லிகை பூ விலை உயர்வு: ஒரு கிலோ ரூ.4,500-க்கு விற்பனை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரித்து வரும் பனிப்பொழிவால் பூக்கள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகைப் பூ நேற்று ரூ.4,500-க்கு விற்பனையானது.

திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அறுவடை செய்யப்படும் பூக்களை விற்பனைக்காக தினமும் திண்டுக்கல் பூ சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் சில நாட்களாகப் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. பனியால் பூக்கள் செடியிலேயே கருகி வீணாகின்றன. அதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது.

வரத்து குறைவு மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.1,500 வரை விற்ற மல்லிகைப் பூ நேற்று ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை விற்றது. இதேபோல் ரூ.300 முதல் ரூ.500 வரை விற்ற கனகாம்பரம் ரூ.1,500-க்கும், ரூ.200 முதல் ரூ.350 வரை விற்ற முல்லைப் பூ ரூ.1,200-க்கும், ரூ.40-க்கு விற்ற செவ்வந்திப் பூ ரூ.150-க்கும், ரூ.30 முதல் ரூ.60 வரை விற்ற பன்னீர் ரோஸ் ரூ.150-க்கும் விற்பனையானது.

பூ வியாபாரிகள் கூறுகையில், பனி குறைந்து விட்டால் பூக்கள் விலை குறையும். வரத்து குறைவு மற்றும் திருக்கார்த்திகை, அடுத்தடுத்து முகூர்த்த நாட்களாக இருப்பதால் விலை அதிகரித்துள்ளது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in