Published : 29 Dec 2016 09:21 AM
Last Updated : 29 Dec 2016 09:21 AM

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் தடுமாறும் மத்திய அரசு: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பண மதிப்பு நீக்கத்தின் மூலம் போதிய புரிதல் இல்லாத, திட்டமிடுதல் இல்லாத முடிவுகளை எடுத்துவிட்டு மத்திய அரசு தடுமாறுகிறது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். டிசம்பர் 12-ம் தேதி வார்தா புயலால் இயற்கை பேரிடர் ஏற்பட்டது. ஆனால், அதற்கு பின் 15 நாட்களுக்குப் பிறகே மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக மத்திய குழுவை ஏன் அனுப்பவில்லை என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

பொதுவாக புயல் பாதிப்பு ஏற்பட்டவுடன் பிரதமர், நிதித்துறை செயலர் ஆகியோர் இடைக்கால நிவாரணமாக ரூ.500 கோடி, 1000 கோடி என அறிவிப்பார்கள். பிறகு மத்திய குழுவின் அறிக்கை அடிப்படையில் இறுதியாக ஒரு தொகையை அறிவிப்பார்கள். ஆனால், இதுவரை மத்திய அரசு இடைக்கால நிவாரணம் வழங்கவில்லை. தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது என குற்றம்சாட்டுகிறேன்.

பண மதிப்பு நீக்கத்தால் எந்தப் பயனும் கிடையாது. 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி மதிப்பிலான நோட்டுகள் பண மதிப்பு நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்கள். இதில் 5 லட்சம் கோடி ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வராது என்று கருதினார்கள். இந்த 5 லட்சம் கோடியும் கறுப்பு பணம், அரசுக்கு லாபம் என அறிவித்துவிடலாம் என நினைத்திருந்தனர்.

மும்பையில் இருந்து எனது நண்பர் ஒருவர் நம்பத் தகுந்த செய்தியை சொல்லியிருக்கிறார். நேற்று வரை 14 லட்சத்து 32 ஆயிரம் கோடி பணம் வங்கிகளுக்கு வந்துவிட்டது. இன்னும் எஞ்சியிருப்பது ஒரு லட்சம் கோடிதான். எனவே, என் கணிப்புப்படி இன்னும் மூன்று நாட்களில் 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி பணமும் வங்கிக்கு வந்துவிடும். பிறகு எதற்கு இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்கள்?

பொறுப்பேற்க வேண்டும்

ரிசர்வ் வங்கி அச்சகங்கள், கருவூலங்கள், வங்கிக் கிளைகள் ஆகிய மூன்றிலிருந்துதான் புதிய ரூபாய் நோட்டுகள் கசிய வாய்ப்பு உள்ளது. இதில், தற்போது புதிய ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து கசிந்தது என்பதை மத்திய அரசு சொல்ல வேண்டும். ரிசர்வ் வங்கியில் இருந்து கசிந்திருந்தால் மத்திய அரசு நேரடி பொறுப்பேற்க வேண்டும்.

ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே 46-ல் இருந்து 80 சதவீதம் வரை ரொக்கப் பரிவர்த்தனை உள்ளது. இந்தியாவில் மின்சாரம் இல்லாத, இணைய வசதியில்லாத ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், காசில்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்கிறார்கள். மின்னணு பணப் பரிமாற்றம் மூலம் மூன்றாவது நபர் லாபம் சம்பாதிப்பதற்கு மத்திய அரசு வழிவகுக்கிறது.

போதிய புரிதல் இல்லாத, திட்டமிடுதல் இல்லாத முடிவுகளை எடுத்துவிட்டு மத்திய அரசு தடுமாறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கேஆர்.ராமசாமி, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x