

சென்னை விமான நிலையத்தில் உள்ள மின் சாதனங்கள் மற்றும் கண்ணாடி கட்டமைப்புகளை பராமரிப்பதற்காக இரு நவீன லிஃப்ட்களை விமான நிலைய நிர்வாகம் வாங்கியுள்ளதாக விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலைய இயக்குநர் ஜி.சந்திரமவுலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:
சென்னை சர்வதேச விமான நிலைய வளாகத்தை சிறப்பாக பராமரிப்பதற்காக, ‘நம்ம சென்னை விமான நிலையம்’ என்ற இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக, விமான நிலையத்தில் உயரத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் உள்ளிட்ட மின் சாதனங் களை பழுது பார்ப்பதற்காக டென்மார்க் கிலிருந்து இரு நவீன லிஃப்ட்களை வாங்கியுள்ளோம்.
32 மீட்டர் உயரம்
இந்த லிஃப்ட்களைக் கொண்டு 32 மீட்டர் உயரம் வரை சென்று பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும். இது நேரடி மின்சாரம் மற்றும் பேட்டரி மின்சாரத்தின் மூலம் இயங்கக் கூடியது. மேலும் இந்த லிஃப்டில், காற்று மற்றும் நீரை மிக அழுத்தத்துடன் செலுத்தும் வசதியும் உள்ளது. இதைக் கொண்டு உயரத்தில் உள்ள கண்ணாடி, ஸ்டீல் உள்ளிட்ட கட்டமைப்புகளை தூய்மைப் படுத்தலாம். இது ஓரிடத்திலிருந்து 11 மீட்டர் சுற்றளவு வரை நகர்ந்து பராமரிப்பு பணிகளை செய்யவல்லது.
200 கிலோ எடை
இந்த லிஃப்டில் இடம்பெற்றுள்ள தொட்டி போன்ற அமைப்பில், இரு பணியாளர்கள் ஏறிச் சென்று பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் 200 கிலோ எடையுள்ள பொருட்களை உடன் எடுத்துச் செல்லலாம். இதை மேலே இருந்தபடியும், கீழே இருந்தபடியும் ரிமோட் மூலமாக இயக்கலாம். இதன் மூலம் விமான நிலையத்தின் பல்வேறு பகுதிகளை எளிதாக பராமரிக்க முடியும்.
இவ்வாறு விமான நிலைய இயக்குநர் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.