Published : 04 Dec 2022 04:43 AM
Last Updated : 04 Dec 2022 04:43 AM
புதுச்சேரி: லட்சுமி யானைக்கு பாண்டி மெரினாவில் புதிதாக மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. உயிர் நீத்த இடத்தில் புதிதாக சிலையும் அமைக் கப்பட்டுள்ளது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மக்கள் குவிவதால் வனத்துறை பகுதி முக்கியச் சாலையானது.
தலைமைத் தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி, வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்குதல் சிறப்பு முகாம் கடந்த இரு தினங்களாக நடந்து வருகிறது. இதையொட்டி பாண்டி மெரினா கடற்கரையில் பிரமிடு போல் உருவாக்கி அதில் இந்திய கொடி வண்ணம் வரைந்து சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை வரைந்துள்ளனர்.
இதற்கிடையே மணக்குள விநாயகர் கோயில் பக்தர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்த மணற் சிற்பத்தின் நான்காவது பகுதியில், கடந்த நவ.30 அன்று மரணமடைந்த கோயில் லட்சுமி யானையின் சிற்பத்தை, பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 9 மணி நேர உழைப்பில் உருவாக்கியுள்ளனர். இதை அனைவரும் பார்த்துச் செல்கின்றனர்.
லட்சுமி யானைக்கு தொடர்ந்து அஞ்சலி: யானை லட்சுமியின் உடல், உருளையன்பேட்டை ஜேவிஎஸ் நகரில் செட்டிக் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து லட்சுமி யானைக்கு அந்த இடத்தில் பக்தர்கள் மலர் அஞ்சலி செலுத்தி, பால் தெளித்து வருகின்றனர்.
புதுச்சேரி - கடலூர் சாலையில் வனத்துறையை ஒட்டி உள்ள சிறிய சாலை வழியாக சென்றால்தான் லட்சுமி யானை அடக்கம் செய்யப்பட்ட இடம் வரும். தற்போது இப்பகுதி முக்கிய சாலையாக மாறிவிட்டது. ஆட்டோ, கார்கள் என மக்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். யானை புதைக்கப்பட்ட இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு, படையல் இடப்படுகிறது. மக்களுக்கு பிரசாதமாக விபூதி, மஞ்சள், பூ ஆகியவை வழங்கப்படுகிறது. இறந்த கோயில் யானையை, தங்களது குடும்பத்தில் ஒரு உயிரை இழந்தது போல பக்தர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே யானை உயிர்நீத்த இடத்தில் நினைவு சிலை தனியாரால் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 500 கிலோ எடை கொண்ட கருங்கல்லில் இந்த யானை சிலையை உருவாக்கியுள்ளனர். சுமார் 3 அடி உயரத்துக்கு பீடமும், அதன் மீது இரண்டு அடிக்கு யானை லட்சுமி சாய்ந்து இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையின் கீழ் ‘புதுச்சேரியின் செல்ல மகள்’ என பொறிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT