

நீர்நிலைகள், ஆற்றங்கரைகளில் வசிப்போர் கவனமாக இருக்க வேண்டும். ரேடியோ, தொலைக் காட்சிகளில் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ செய்தியை மட்டும் பிறருக்கு பகிர வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வார்தா புயல் சென்னையில் கரையை கடப்பதை முன்னிட்டு, பொதுமக்கள் செய்ய வேண்டி யவை, செய்யக்கூடாதவை தொடர் பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
ரேடியோ மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனித்து அவற்றில் வரும் அதிகாரப்பூர்வமான செய்தியை மட்டும் பிறருக்கும் தெரிவிக்க வேண்டும்.
புயல் காற்று அதிவேகமாக இருக்கும் என்பதால் கதவு மற்றும் ஜன்னல்களை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். கடற்கரை மற்றும் நீர்சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் குடியிருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேற வேண்டும். அங்கு நீர் சூழும் முன்னரே பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும்.
தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாது என்றால் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொண்டால் மட்டும் வெளியேறலாம்.
நீர்நிலைகள் மற்றும் ஆற்றங் கரைகளில் உள்ள குடியிருப்புகளுக் குள் கனமழை காரணமாக நீர் சூழலாம். எனவே, கரையோரங் களில் குடியிருப்போர் கவனமாக இருக்க வேண்டும்.
சமைக்காமல் உண்ணக் கூடிய பிரட், பிஸ்கட், பழங்களை தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்க வேண்டும். நீர் சூழ்ந்து வெளியேற வேண்டிய பகுதிகளில் நீங்கள் குடியிருந்தால் பொருட்சேதங்களை தவிர்க்க விலையுயர்ந்த பொருட்களை வீட்டில் உயரமான பகுதிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
குழந்தைகள் மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்கு தேவையான உணவுப் பொருளை இருப்பு வைக்க வேண்டும். மழைநீரில் செல்வதாக இருந்தால் கையில் கொம்பு ஒன்றை வைத்துக் கொள்ளவேண்டும். பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
மின் ஒயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்புள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும். அமைதியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளவும். ஆபத்தை அமைதியாக எதிர்கொள்ளும் உங்கள் திறன் மற்றவர்களுக்கும் பயன்படலாம். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை புயல் பாதுகாப்பு மையங்களில் இருந்து வீட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டாம். மின் கம்பங்களில் இருந்து தளர்வான, அறுந்த மின் கம்பிகளை கவனமாக தவிர்க்க வேண்டும். பேரிடரால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளுக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். மனிதாபிமான அடிப்படையில் உங்கள் உதவி தேவைப்படும் எனில் மட்டும் செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.