சேகர் ரெட்டியின் காட்பாடி வீட்டிலும் கத்தை கத்தையாக பணம், நகை பறிமுதல்: மோசடிக்கு துணை போனவர்கள் கைதாகிறார்கள்

சேகர் ரெட்டியின் காட்பாடி வீட்டிலும் கத்தை கத்தையாக பணம், நகை பறிமுதல்: மோசடிக்கு துணை போனவர்கள் கைதாகிறார்கள்
Updated on
2 min read

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் விடிய விடிய நடத்திய சோதனையில் ரூ.1.20 கோடி ரொக்கமும் கிலோ கணக்கில் தங்க நகைகளும் முக்கிய ஆவ ணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் அடையாளம் காணப்பட் டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டான்துளசி கிராமத் தைச் சேர்ந்தவர் சேகர் ரெட்டி (45). பொதுப்பணித் துறை ஒப்பந்த தாரர் மற்றும் மணல் குவாரி தொழில் செய்து வருகிறார். அதிமுக பிரமுகரான இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த சில நாட்களாக வருமான வரித் துறை யினர் சோதனை நடத்தி வருகின்ற னர்.

சென்னையில் வசித்து வரும் அவரது வீடு, அலுவலகம் மற்றும் காட்பாடியில் உள்ள வீடு, உறவினர் சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோருக்கு சொந்தமான இடங் களில் 4-வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

முன்னதாக 3-வது நாள் முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளின் மொத்த மதிப்பு 179 கிலோவாக இருந்தது. ரொக்கமும் 100 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. 10 கோடி ரூபாய்க்கும் மேல் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், 4-வது நாளாக நேற்று அதிகாலை வரை தேடுதல் வேட்டை நீடித்தது. அப்போதும் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்க நகைகள் மற்றும் பணக் கட்டுகள் சிக்கியதாக தகவல் வெளியானது.

இதனிடையே காட்பாடி காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதையொட்டி, கடந்த 8-ம் தேதி காட்பாடியில் உள்ள சேகர் ரெட்டி வீட்டுக்கு வந்த வருமான வரித் துறையினர் வீட்டின் கதவு, ஜன்னல் உட்பட 198 இடங்களில் ‘சீல்’ வைத்தனர். இதையடுத்து, சேகர் ரெட்டி வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் கடந்த 2 நாட்களாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் வேலூர் மண்டல வருமான வரித்துறை கூடுதல் இயக்குநர் முருகபூபதி தலைமையில் 12 பேர் கொண்ட அதிகாரிகள் வந்தனர். அப்போது சேகர் ரெட்டியின் மனைவி ஜெயஸ்ரீ யிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, சேகர் ரெட்டி வீட்டில் இருந்த சீல்கள் அகற்றப் பட்டன.

ஒவ்வொரு அறைகள் மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள தோட்டம், மேல்மாடி, கார் நிறுத்தி வைக்கும் குடோன், குடிநீர் மின்மோட்டார் அறை என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். விடிய விடிய இந்தச் சோதனை நடந்தது.

பின்னர், நேற்று காலை 7.40 மணிக்கு பெரிய அளவிலான 6 கைப்பைகள், 2 பெரிய சூட்கேஸ் களுடன் வருமான வரித்துறை யினர் வெளியே வந்தனர்.

இதுகுறித்து வருமான வரித் துறையினர் கூறியதாவது: சென் னையைத் தொடர்ந்து, காட்பாடி யில் உள்ள சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கு முறையான கணக்கு இல்லாததால் அந்தப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்த 3 அறைகளில் உள்ள பீரோக்களில் இருந்து தங்க நகைகளும் ஆவணங்களும் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் சென் னைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து மொத்தம் எவ்வளவு பணம், நகை கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பட்டியல் தயார்

இதற்கிடையில், குவியல் குவிய லாக பணம், நகைகளை பதுக்கி வைத்திருந்த சேகர் ரெட்டியிடம் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது சேகர் ரெட்டி கொடுத்த தகவலின்படி அவருக்கு உதவி செய்த அரசியல் பிரமுகர், அதிகாரிகள் மற்றும் நண்பர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்துக்குப் புறம்பாக உதவி செய்த வங்கி அதிகாரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் விரைவில் கைது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கிடையில் சிபிஐ மற்றும் அம லாக்கப்பிரிவு அதிகாரிகளும் விசா ரணையை தொடங்கியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in