திராவிட இயக்க கொள்கை உணர்வை யாராலும் அழிக்க முடியாது: கி.வீரமணி பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின் உறுதி

தி.க. தலைவர் கி.வீரமணி 90-வது பிறந்த நாள் விழாவில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருதை முதல்வர் ஸ்டாலினுக்கு, பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் சோம இளங்கோவன் வழங்கினார்.படம்: ம.பிரபு
தி.க. தலைவர் கி.வீரமணி 90-வது பிறந்த நாள் விழாவில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருதை முதல்வர் ஸ்டாலினுக்கு, பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் சோம இளங்கோவன் வழங்கினார்.படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை: திராவிட இயக்க கொள்கை உணர்வை யாராலும் அழிக்க முடியாது என்று கி.வீரமணி பிறந்த நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதியுடன் கூறினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 90-வது பிறந்த நாள் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வீரமணிக்கு வாழ்த்து தெரிவித்தார். பெரியார் பன்னாட்டு மையம் சார்பில், 22-வது சமூகநீதிக்கான கி.வீரமணி விருது, முதல்வருக்கு வழங்கப்பட்டது. விழாவில் முதல்வர் பேசியதாவது:

திராவிட கழக தலைவர் வீரமணியின் பிறந்தநாள் விழாவில் இவ்விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. வீரமணிக்கு 90-ம் ஆண்டு பிறந்தநாள் விழா மட்டுமல்ல, நூற்றாண்டு விழாவையும் எடுப்போம். நெருக்கடி காலத்தில் நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் தனது உயிரையும் காத்து எனது உயிரையும் காத்தவர் வீரமணி.

திராவிட இயக்கத்தின் கொள்கை உணர்வை யாராலும் அழிக்க முடியாது. இது ஒரு கட்சி அல்ல. கொள்கை உணர்வு. கலைஞர் மறைந்த பிறகு எனக்கு மன தைரியத்தையும், தெம்பையும் ஊட்டியவர் வீரமணி. தனது பிறந்தநாளின்போது கூட மாநில உரிமைக்காக போராடியவர்.1945 மட்டுமல்ல 2022-ம் ஆண்டிலும் போர்க்களம் செல்வதற்கு தயாராக உள்ளார்.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தோம். அவர் அதை காலதாமதம் செய்தார். இதைக் கணடித்து நேற்றுகூட போராட்டம் நடத்தினார். இதனால்தான் நமக்கெல்லாம் அவர் ஆசிரியராக உள்ளார். இவ்வாறு முதல்வர் பேசினார்.

வீரமணி தனது ஏற்புரையில், “தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் அற்புதமான திராவிட மாடல் ஆட்சியைக் கண்டு உலகமே வியந்து கொண்டிருக்கிறது. எதிரிகள் இந்த ஆட்சியில் குற்றம் காண்பதற்காக ஓடுகிறார்கள், தேடுகிறார்கள். பெரியார் மண்ணை ஒருபோதும் காவி மண்ணாக யாராலும் ஆக்க முடியாது. திராவிட கோட்டைக்குள் ஆரியர், ஆர்எஸ்எஸ் யாரும் உள்ளே நுழைய முடியாது” என்றார்.

விழாவில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in