

போடி: போடி - மதுரை அகல ரயில் பாதை திட்டப் பணியில், தேனி முதல் மதுரை வரை பணிகள் நிறைவடைந்து தற்போது ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தேனி - போடி இடையே 15 கி.மீ. தூரத்துக்கான பணிகள் அண்மையில் முடிவடைந்தன.
போடியிலிருந்து தேனி வரை 120 கி.மீ.வேகத்தில் ரயில் இன்ஜினை இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு முதன்மை துணைப் பொறியாளர் சூரியமூர்த்தி, உதவிப் பொறியாளர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ரயில் இன்ஜினை லோகோ பைலட் முத்துகிருஷ்ணன், உதவி லோகோ பைலட் அய்யனார் இயக்கினர். இன்ஜின் 9 நிமிடங்களில் தேனியை வந்தடைந்தது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரயில் இன்ஜினை இயக்கும்போது தண்டவாளத்தில் ஏற்படும் அதிர்வு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் ரயில் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன் பின்பு உயர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று முறைப்படி போடிக்கு ரயில்கள் இயக்கப்படும் என்று கூறினர்.