

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 26 வயதுடைய பார்வதி என்ற பெண் யானைக்கு 2021-ம் ஆண்டு முதல் இடது மற்றும் வலது கண்களில் புரை நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவக் குழுவினரைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. புரை நோய்க்கு யானையின் கண்களில் காலை, மாலை என இரண்டு வேளையும் மருந்து செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், பார்வதி யானையின் கண்களில் இருந்து நீர் வடிவது நின்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்து மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் யானை குளிப்பதற்கு முன் குளிப்பதற்கு பின் எனத் தொடர்ந்து கண்களில் சொட்டு மருந்து இடப்படுகிறது. படிப்படியாக பார்வதி யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரி வித்தனர்.