Published : 17 Dec 2016 02:35 PM
Last Updated : 17 Dec 2016 02:35 PM

குமரியில் சாலையோரம் உள்ள 34 மதுக்கடைகள் அகற்றப்படுமா?- உச்ச நீதிமன்ற உத்தரவால் எதிர்பார்ப்பு

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரமுள்ள மதுபானக் கடைகளை மார்ச் 31-க்குள் அகற்ற வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலையோரம் உள்ள 34 கடைகள் அகற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பகுதியில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு மிக அருகில் செயல்பட்டு வந்த மதுக்கடையை மூட வலியுறுத்தி ‘மது போதைக்கு எதிரான மக்கள் இயக்கம்’ சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி உண்ணாமலைக்கடையில் நடைபெற்ற போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் பங்கேற்றார்.

அப்போது செல்பேசி கோபுரத்தின் மீது ஏறி போராடிய அவர் உயிரிழந்தார். அதன் பின்னர் உண்ணாமலைக்கடையில் மதுக்கடை மூடப்பட்டது.

சசிபெருமாள் மறைவுக்கு பின் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுக்கடைகளை அகற்றக் கோரி போராட்டம் வெடித்தது. தேர்தல் அறிக்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் மதுவிலக்கு கோஷத்தை முன்வைத்தன. அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் மதுக்கடை எண்ணிக்கை, நேரக் குறைப்பு ஆகியவை இடம்பெற்றன.

6 கடைகள் மூடல்

ஜெயலலிதா முதல்வரானதும் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதன் மூலம் மாவட்டத்தில் 144 ஆக இருந்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 138 ஆக குறைந்தது.

தற்போதைய நிலையில் மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலையை ஒட்டி 34 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளால் இதுவரை பாதிக்கப்பட்டு வந்த மக்கள், தற்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த 34 மதுக்கடைகளும் முற்றிலும் அகற்றப்படுமா? அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x