இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு 

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு 
Updated on
1 min read

மதுரை: ‘இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மாதத்துக்கு மாறியவரை பிசி முஸ்லிம் ஆக கருத வேண்டும்’ என்ற கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யு.அக்பர் அலி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு. நானும், என் குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து 2008-ல் இஸ்லாம் மதத்துக்கு மாறினோம். நான் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் என ராமநாதபுரம் மண்டல துணை வட்டாட்சியர் 2015-ல் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

2018-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு பிசி முஸ்லிம் பிரிவில் விண்ணப்பித்தேன். எழுத்துத் தேர்வு மற்றும் மெயின் தேர்வு எழுதினேன். இறுதி தேர்வுப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை. தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது என் பெயரை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்காமல், பொதுப்பிரிவில் பரிசீலித்துள்ளனர். என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலித்து வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு. மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியார் அளித்த சான்றிதழை தாக்கல் செய்துள்ளார். அதில் சத்திய மூர்த்தி என்பவர் அவராகவே விரும்பி இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. அதை தவிர சான்றிதழில் வேறு ஏதும் இல்லை. மதம் மாறியவர் லெப்பை வகுப்பை சேர்ந்தவர் என அரசு காஜியார் அறிவிக்க முடியாது.

அப்படியிருக்கும்போது மதச்சார்பற்ற அரசின் வருவாய் அலுவலர் மதம் மாறிய தனி நபர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என எப்படி சான்றிதழ் வழங்கினார் என்பது தெரியவில்லை.

மதம் மாறிய தன்னை பிசி முஸ்லிமாக கருத வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுதான். அதில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in