Published : 02 Dec 2022 07:16 PM
Last Updated : 02 Dec 2022 07:16 PM

போலி நில ஆவணங்களை காண்பித்தோருக்கு வழங்கப்பட்ட ரூ.20.5 கோடி இழப்பீட்டுத் தொகை திரும்ப வசூல்: தமிழக அரசு தகவல் 

சென்னை: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலில் போலி நில ஆவணங்களை காண்பித்தவர்களுக்கு வழங்கப்பட்ட 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது, ஒரு சிலர் போலி ஆவணங்களை காண்பித்து அரசிடம் 20 கோடி ரூபாய் வரை இழப்பீடு பெற்றுள்ளதாக கூறி ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலத்தின் உண்மையான உரிமையாளருக்குத்தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, போலி ஆவணங்களை காண்பித்து இழப்பீடு பெற்றவர்கள் தொடர்பாக சிபிசிஐடி நடத்திவரும் விசாரணையில் திருப்தி இல்லை. இழப்பீடாக கொடுக்கப்பட்ட தொகை பொதுமக்களுடையது. அந்தப் பணத்தை முறைகேடாக பெற்றவர்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும்.தவறாக கொடுக்கபட்ட இழப்பீட்டுத் தொகையை திரும்ப பெறாவிட்டால், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், "தவறாக வழங்கப்பட்ட இழப்பீடு தொகையான 20 கோடியே 52 லட்சம் முழுவதும் வசூலிக்கப்பட்டுவிட்டது. விரைவில் நீதிமன்ற வழக்கு கணக்கில் செலுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

அப்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், "இந்த திட்டத்திற்காக 190 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், 20 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. எனவே மீதமுள்ள தொகை எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை கண்டறிய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதி, "அரசிடம் செலுத்தப்பட்ட இழப்பீடு எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து இவ்வளவு காலம் கருத்தில் கொள்ளாமல், நீதிமன்றம் தீவிரம் காட்டியபிறகுதான் நெடுஞ்சாலை ஆணையம் கவனத்தில் கொள்ளுமா?” என கேள்வி எழுப்பினர்.

பின்னர் 190 கோடி ரூபாய் இழப்பீடு எவ்வாறு உரிய நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது என்ற விவரங்களை தற்போதைய மாவட்ட வருவாய் அதிகாரி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதேநேரம் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கிய முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x