Published : 02 Dec 2022 02:55 PM
Last Updated : 02 Dec 2022 02:55 PM

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற அறப்போர் இயக்கத்துக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அறப்போர் இயக்கம் கருத்து தெரிவிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-21 ஆம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமைச் செயலர், நெடுஞ்சாலைத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறைகளிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22-ம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தது.

இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே மான நஷ்டஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் தன்னை பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு தடைவிதிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், "எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது. ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அந்த நிறுவனம் டெண்டரில் கலந்துகொள்ளவில்லை. டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள் எதுவும் டெண்டருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை. மனுதாரரின் புகழுக்கு களங்கும் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் இவ்வாறு குற்றம்சாட்டப்படுகிறது" என்று வாதிடப்பட்டது.

அப்போது அறப்போர் இயக்கம் சார்பில், "ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரைத்தான் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தில் மாற்று கருத்து என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று. அதுதான் வலுவான ஜனநாயகத்தின் அடிநாதம். 2018-19 ஆம் ஆண்டில் போடப்பட்ட சாலையை மீண்டும் அமைப்பதற்காக 276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் குறித்த முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்ததால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு பொறுப்பு. முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டது" என்று வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு எதிராக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு கோரிய பிரதான வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x