உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரிய சமக வழக்கு: காவல்துறை பரிசீலிக்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: போதைப்பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரிய சமத்துவ மக்கள் கட்சி மனுக்களை பரிசீலித்து முடிவெடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருட்களின் பயன்பட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் நாளை (டிசம்பர் 3) ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுமதி அளிக்க கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது.

காவல்துறை அனுமதி அளிக்காததால் உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ் , "மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி ஒட்டுமொத்தமாக டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதனால் காவல்துறை அனுமதி வழங்ககவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறையிடம் விண்ணப்பித்தால் மனுக்கள் பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.கபிலன் , "நவம்பர் 18 ஆம் தேதியே மனு அளித்தும் மனுவை பரிசீலித்து முடிவெடுக்கவில்லை. மாவட்ட வாரியாகவும் உண்ணாவிரதத்துக்கு அனுமகி கோரி மனுக்கள் அளிக்கபட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "மாவட்ட வாரியாக அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்து, உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in