

திருநெல்வேலி: திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் 20-வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது. ஏஐடியூசி மாநிலத் தலைவர் சுப்பராயன், பொதுச் செயலாளர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து, நினைவு ஜோதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மாநாட்டை தொடக்கி வைத்தனர்.
மாநாட்டில் முத்தரசன் பேசும்போது, பிரதமர் மோடியின் கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனங்களை கூட உருவாக்கவில்லை. ஏற்கெனவே இருந்த பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்கிறார் என்றார்.
தமிழக அரசுக்கு எதிராக தீர்மானம்: முன்னதாக செய்தியாளர்களிடம் சுப்பராயன் எம்.பி கூறும்போது, வரும் 16-ம்தேதி முதல் 20-ம் தேதி வரை கேரள மாநிலம் ஆலப்புழாவில் தேசிய அளவிலான ஏஐடியூசி மாநாடு நடைபெறுகிறது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு இசைவு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசும் செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டங்கள் நடத்துவது தொடர்பாகவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி முடிவு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.