

கோவை: தமிழகத்தில் இருந்து கேரளா செல்ல ஆன்லைனில் தற்காலிக அனுமதி வழங்கப்படுவதால் அவதிக்குள்ளாவதை தவிர்க்க, நேரடியாக சென்று அனுமதி பெறும் பழைய நடைமுறையையும் தொடர போக்குவரத்துதுறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள-தமிழக எல்லையான வாளையாறு அருகே உள்ள க.க.சாவடியில் போக்குவரத்துதுறை (ஆர்டிஓ) சோதனைச்சாவடி உள்ளது. இங்கு, சுற்றுலா, சரக்கு வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்து கேரளாவுக்கு செல்ல தற்காலிக அனுமதி (டிபி) வழங்கப்படுகிறது. வாகனங்களுக்கு, இருக்கையை பொறுத்தும், சரக்கு வாகனங்களில் எடையை பொறுத்தும் அனுமதிக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்பு சோதனைச்சாவடியில் ஆவணங்களை காண்பித்து பணம் செலுத்தினால், தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது ஆன்லைனில் அனுமதி பெற்றால் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த நடைமுறையால் பாதிக்கப்படுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக கோவையைச் சேர்ந்த வாடகை வாகன ஓட்டுநர்கள் சிலர் கூறும்போது, “வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழலை தவிர்க்க ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தனர். ஆனால், ஓட்டுநர்களில் பலர் ஆன்லைன் நடைமுறையால் சிரமப்படுகின்றனர்.
நடைமுறை தெரியாமல் கேரளா நோக்கி செல்லும் வாடகை வாகன ஓட்டுநர்களிடம் க.க.சாவடி சோதனைச்சாவடிக்கு அருகில் உள்ள தனியார் பிரவுசிங் மையத்தில் அதிக கட்டணம் பெற்றுக்கொண்டு தற்காலிக அனுமதி பெற்றுத்தருகின்றனர். எங்களுக்கு வரும் வாடகைகளில் 25 சதவீதம் மட்டுமே முன்கூட்டியே முன்பதிவு செய்து வரும். எஞ்சியுள்ள வாடகைகள் திடீரென வருபவைதான். எனவே, முன்கூட்டியே அனுமதி பெறுவதில் சிக்கல் உள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் கோவை வழியாக கேரளாவுக்கு செல்கின்றனர்.
எனவே, ஆன்லைன் மட்டுமல்லாது, சோதனைச்சாவடியில் நேரடியாக அனுமதி பெறும் நடைமுறையையும் தற்காலிகமாக தொடர வேண்டும். ஆன்லைன் நடைமுறையை அனைவரும் தெரிந்துகொண்ட பிறகு முழுவதும் ஆன்லைனில் அனுமதி என்ற முறையை பின்பற்ற போக்குவரத்துதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.