

அனைவராலும் மதிக்கப்பட்டு, மிகவும் நேசிக்கப்பட்ட தலைவராக ஒரு புதிய சகாப்தத்தை படைத்தவர் ஜெயலலிதா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவு குறித்து திருநாவுக்கரசர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உடல்நிலை மேலும் குன்றி நேற்றிரவு இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைகிறேன்.
எம்.ஜி.ஆரால், அடையாளம் காணப்பட்டு திரையுலகில் எம்.ஜி.ஆருடன் கலையுலகில் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர். தமிழ் உட்பட பல்வேறு மொழிப்படங்களில் முன்னணி கதாநாயகர்களோடு திரையுலகில் ஜொலித்தவர்.
1982-ல், எம்.ஜி.ஆரால் அதிமுகவில் சேர்க்கப்பட்டு சத்துணவுக்குழு உறுப்பினராக, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக, கொள்கைபரப்புச் செயலாளராக படிப்படியாக அரசியலில் உயர்ந்து வளர்ந்தவர். எம்.ஜி.ஆர் 1984 பொதுத்தேர்தலின் போது அமெரிக்க மருத்துவமனையில் சிசிக்சை பெற்ற போது நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழகம் முழுவதும் பம்பரம் போல் சுற்றிச் சுழன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக வரவும், அதிமுக ஆட்சி அமையவும் அரும்பாடுபட்டவர்.
எம்.ஜி.ஆரின் மறைவிற்குப்பின் கட்சி உடைந்தபோது கட்சியின் ஒரு பிரிவிற்கு தலைமையேற்று தன் கடும் உழைப்பாலும், அறிவாற்றலாலும், மக்களை கவர்ந்திழுக்கும் தன்மையாலும் தன் கனிவும், இனிமையும் நிறைந்த பேச்சாற்றலாலும், ஜெயலலிதா அணியையே பிறகு முழுமையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக ஒன்றுபடுத்தி வலிமைப்படுத்தினார்.
பிரிந்த கழகத்தை இணைத்து 'இரட்டை இலை' சின்னத்தை திரும்பப்பெற்று தலைவர் ராஜீவ் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து வெற்றி வாகை சூடினார். 1989-ல் எதிர்க்கட்சி தலைவராகவும், 1991-ல் முதல்வராகவும், தொடர்ந்து தற்போது இரண்டு முறை முதல்வராகவும் மொத்தத்தில் நான்கு முறை வெற்றி பெற்று முதல்வராகி புதிய சரித்திரம் படைத்தார்.
கோடான கோடி மக்களின் அன்புக்குரியவராய் தாய்மார்களின் பேரன்பிற்கு பாத்திரமானவராய் ஜாதி, மத எல்லைகளைத் தாண்டி அனைவராலும் மதிக்கப்பட்டு, மிகவும் நேசிக்கப்பட்ட தலைவராக ஒரு புதிய சகாப்தத்தை படைத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியை பலப்படுத்தி வலிமையோடு நடத்தி சென்ற பெருமைக்குரியவர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களால் 'அம்மா' என்று அன்போடு அழைக்கப்பட்டவர். துணிச்சலும், மனதைரியமும், விடாமுயற்சியும், நிர்வாகத்திறனும், அறிவாற்றலும் நிறைந்தவர்.
எம்.ஜி.ஆர் காலத்திலும் அவர் மறைந்த பிறகும் ஜெயலலிதாவோடு பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றிவன் நான் என்பதால் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு எனக்கு மிகுந்த மனத்துயரத்தை தருகிறது. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரை இழந்து வாடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நண்பர்களுக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.