

ஈரோடு: மாணவர்கள் மூலம் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை மீது பெருந்துறை போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி பாலக்கரை அரசு தொடக்கப்பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்றை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, இப்பள்ளி மாணவர் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் நவ.21-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அந்த மாணவர், “பள்ளியின் கழிவறையைச் சுத்தம் செய்தேன். அப்போது கொசு கடித்ததாக” மருத்துவரிடம் கூறினார். இதையறிந்த மாணவனின் தாய் ஈரோடு ஆட்சியரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிச்சந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம் ஆகியோர் நேற்று பாலக்கரை பள்ளியில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவர்கள் 6 பேரை தலைமை ஆசிரியை கீதாராணி கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது தெரியவந்தது. மேலும், அதிகாரிகள் விசாரணை நடத்த வந்தபோது தலைமை ஆசிரியை பணிக்கு வராமல் தலைமறைவானார். பள்ளியில் விசாரணை நடப்பது அறிந்து அங்கு வந்த மாணவர்களின் பெற்றோரிடம், “இந்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியை கீதாராணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இதுதொடர்பாக மாணவனின் தாய் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் பெருந்துறை போலீஸார் தலைமை ஆசிரியை கீதாராணி மீது குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபத்தான ரசாயனங்களை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.