

சென்னை: அதிக அபராதம் விதிக்க வழி வகுத்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தைக் கைவிடக் கோரி தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஸ்பாட் பைன் முறையை ரத்து செய்ய வேண்டும். ஓலா, ஊபர் நிறுவனங்களின் அதிககட்டண வசூலைத் தடுக்க மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழக அரசே செயலியை (App) தொடங்க வேண்டும். போக்குவரத்துத் துறை, காவல் துறை வசூல் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அனைத்து நகரங்களிலும் வாகன நிறுத்துமிடம் ஒதுக்கித் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை எழும்பூர் லாங்க்ஸ் கார்டன் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் ஆறுமுக நயினார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் குப்புசாமி உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது பொதுச்செயலாளர் குப்புசாமி கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை (2019) தமிழகஅரசு அண்மையில் அமல்படுத்திஉள்ளது. இதையடுத்து சாலையில் வருகின்ற எந்த வாகனங்களாக இருந்தாலும் அத்தனை வாகனங்களுக்கும் குறைந்தது ரூ.1000 என்றமுறையில் அபராதம் வசூலிக்கின்றனர்.
இதற்குக் காரணம் என்ன என்றுகேட்டால், புதிய மோட்டார் வாகனசட்டத்தை அமல்படுத்திவிட்டார்கள். இது மத்திய அரசின் ஏற்பாடுஎனக் கூறுகிறார்கள். தமிழக அரசு காவல் துறையை ஏவிமிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது. இதை எல்லாம் தடுக்க வேண்டும். இவ்வாறு பொதுச் செயலாளர் குப்புசாமி கூறினார்.