Published : 23 Dec 2016 11:24 AM
Last Updated : 23 Dec 2016 11:24 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு கட்டிடங்கள் திறப்பு எப்போது?

திண்டுக்கல் மாவட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளன. இதனால் அரசு அலுவலர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது திறக்கப்படாமல் உள்ளது. இதனால் உள் நோயாளிகள் போதிய வசதியின்றி தரையில் படுத்து சிகிச்சை பெறுகின்றனர்.

திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகம் தற்போது வசதிகள் இன்றி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இது திறக்கப்படாமல் உள்ளது.

திண்டுக்கல் மாவட்ட விளை யாட்டு அரங்கம் அருகே கட்டப் பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கம் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது.

இதேபோல் கிராமப்புறங்களில் பல இ-சேவை மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை. திண்டுக்கல் தாலுகா காவல் நிலையக் கட்டிடப் பணி முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளது.

முதல்வராக இருந்த ஜெய லலிதா சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தை செப்டம்பர் 22-ம் தேதி காலை 11.30 மணிக்கு திறந்து வைப்பதாக இருந்தது. இதையடுத்து மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் புதிய மாநகராட்சி கட்டிடத்தில் தயார் நிலையில் இருந்தனர். சிறிது நேரத்தில் நிகழ்ச்சி மாலையில் நடைபெறும் என தள்ளி வைக்கப்பட்டது.

பின் அப்போதைய முதல்வரின் உடல்நிலை காரணமாக நிகழ்ச்சி ரத்து என அறிவிக்கப்பட்டது. இதனால் கடைசி நேரத்தில் திண்டுக்கல் மாநகராட்சி கட்டிடமும் திறக்கப்படவில்லை.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடப் பணி முடிந்துவிட்டது. தற்போது நகரின் மையப் பகுதியில் உள்ள நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா காண வேண்டி உள்ளன. திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகம் உட்பட பல அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. அரசு கட்டிடங்களை விரைவில் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்டிடங்களுக்கு அரசு அலுவலகங்கள் சென்றால் அரசுக்கு வாடகை மிச்சமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x