காட்பாடி | கனமழை சேத ஆய்வுக்கு அதிகாரிகள் வராததால் நெற்பயிருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த விவசாயி
வேலூர்: காட்பாடி அருகே பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிரை ஆய்வு செய்ய வராத அதிகாரிகளை கண்டித்து, பெட்ரோல் ஊற்றி நெற் பயிருக்கு விவசாயி தீ வைத்த சம்பவத்தால் சலசலப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் இயற்கை பேரிடரில் இருந்து பயிர்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீடு வழங்கும் வகையில் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பயிர் சாகுபடி தொடங்கும் நேரத்தில் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது கூட்டுறவு வங்கிகள் மூலம் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்து வருகின்றனர். காப்பீடு செய்வது குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை கொண்டா ரெட்டியூரைச் சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார். இவருக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். இதற்காக, கடந்த அக்டோபர் மாதம் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ.1,300 செலுத்தி நெற் பயிருக்கு காப்பீடு செய்துள்ளார். இந்த மாதம் இறுதியில் அறுவடைக்கு நெற்பயிர் தயாராக இருந்தது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் இவரது நெற் பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, நெற் பயிருக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி சிவக்குமார், வேளாண் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அதிகாரிகள் தரப்பில் சிவக்குமாரின் நிலத்தை இதுவரை ஆய்வு செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தி அடைந்த சிவக்குமார் தனது நெல் வயலுக்கு பெட்ரோல் ஊற்றி நேற்று காலை தீ வைத்தார். வயலின் சிறிய பகுதி மட்டும் எரிந்த நிலையில் மழை காரணமாக தொடர்ந்து எரியவில்லை. இந்த தகவலை அடுத்து காட்பாடி உதவி வேளாண் அலுவலர் அசோக்குமார் விரைந்து சென்று சிவக்குமார் நிலத்தில் பார்வையிட்டதுடன், அவரை சமாதானம் செய்தார். அறுவடை நடைபெறும் நேரத்தில் சிவக்குமாரின் நிலம் கண்டிப்பாக ஆய்வு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
இது தொடர்பாக வேளாண் அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ‘‘ஆண்டுதோறும் சொர்ணவாரி, சம்பா, நவரை பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்யப்படுகிறது. அறுவடை முடிந்த ஓராண்டு கழித்தே பாதிப்பு இருந்தால் இழப்பீடு வழங்கப்படும். கடந்த ஆண்டு சம்பா, நவரை பருவத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு தற்போது தான் இழப்பீடு கிடைக்க வாய்ப்புள்ளது. நடப்பாண்டு பருவத்துக்கு அடுத்த ஆண்டுதான் இழப்பீடு கிடைக்கும். அதுவும், பருவம் முடியும் நேரத்தில் மட்டுமே காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள். அவர் கூறும் நேரத்தில் ஆய்வு நடத்த முடியாது.
காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்தவர் களுக்கு இழப்பீடு என்பது மழை, வெள்ளம், வறட்சி என இயற்கை பாதிப்பால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு கிராமம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீட்டை கணக்கில் கொள்வார்கள். தனி நபர் பாதிப்பாக இருந்தால் இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை. கடந்தாண்டு நிவர், புரவி புயல் நேரத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுக்காக வேலூர் மாவட்டத்துக்கு மட்டும் சுமார் இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடாக கிடைக்கப்பெற்றது. இது அதிகபட்ச தொகையாகும்’’ என்றனர்.
