

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த முறை வழங்கப்பட்ட பொங்கல் பரிசில் பல்வேறு இடங்களில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானது. இந்த முறை இதுபோன்று பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அந்த தொகையை குடும்ப அட்டைதாரர்களின் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 638 நியாய விலை கடைகள் உள்ளன. இதில், 3 லட்சத்து 23 ஆயிரத்து 500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அரசு பொங்கல் பரிசு தொகுப்பு பதிலாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 178 பேர் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
அந்தந்த கடைகளுக்கு உட்பட்டவர்களுக்கான பட்டியல், நியாய விலை கடை விற்பனையாளரிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மூலமாக கூட்டுறவு வங்கிகளில் ஜூரோ பேலன்ஸ் கணக்கை தொடங்க, குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து உரிய ஆவணங்கள் பெறுவதற்காக பணிகளை நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் கூட்டுறவு துறை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்" என்றனர். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.