Published : 01 Dec 2022 06:54 PM
Last Updated : 01 Dec 2022 06:54 PM

“பீட்டாவுக்கு தார்மிக உரிமை இல்லை” - ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற கேள்விகளும், தமிழக அரசின் வாதங்களும்

கோப்புப்படம்

புதுடெல்லி: 5,000 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாச்சார நிகழ்வை பொய்யையும், அவதூறையும் கூறி நிறுத்தப் பார்க்கக் கூடாது என ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிரான மனுக்கள் மீதான 4-வது நாள் விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "காட்டு விலங்குகள் மற்றும் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டது என விலங்குகள் இரண்டு வகைப்படும். விலங்குகளுக்கென தனி உரிமை உண்டு. அதை பாதுகாப்பது கடமையென்று முந்தைய நாகராஜ் வழக்கின் தீர்ப்பு கூறுகிறது. அவ்வாறு உரிமை என்பது இல்லை. ஆனால், விலங்குகளுடனான உறவு என்பது உண்டு. அவற்றுக்கு வேண்டுமென்றே தீங்கு விளைவிக்க மாட்டோம் என்பதே நிதர்சனம்.

நாகராஜ் வழக்கில் ஜல்லிக்கட்டு நடக்கும்போது என்ன கள நிலவரம் என்பது தொடர்பாக 2013-ல் விலங்குகள் நல வாரியம் 3 அறிக்கைகளை அளித்தது. அதன் அடிப்படையில் நாகராஜ் வழக்கில் தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை வேறு. உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, விதிகளுக்குட்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.மேலும், தற்போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்றி, அரசின் கண்காணிப்பில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் குறித்து முன்னர் தாக்கல் செயப்பட்ட அறிக்கைகள் தனியார் அமைப்பு மூலம் எடுக்கப்பட்டது. அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்

மேலும், ஜல்லிக்கட்டு மற்றும் காளைகள் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை. காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கென தனி மைதானம் அமைத்துப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மது போன்றவை கொடுக்கப்படுவது இல்லை. காளைகள் துன்புறுத்தப்படுவது இல்லை. காளைகளின் வால் முறுக்கப்படுவதில்லை. காளைகள் அடிக்கப்படுவதோ, காயப்படுத்தப்படுவதோ இல்லை. அந்தக் காலம் எல்லாம் கடந்து பல ஆண்டுகளாகிவிட்டன.

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபு, பண்பாட்டோடு சேர்ந்த ஒன்று. மேலும் கடந்த 2013-ல் பல்வேறு அறிக்கைகள் அடிப்படையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடுமையான விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 2017 முதல் 2022 வரை ஜல்லிக்கட்டு விதிமீறல் தொடர்பாக ஒரு புகாரும் இல்லை. அதேவேளையில் தனியார் பலரும் ஜல்லிக்கட்டு நடத்துகின்றனர். காளைகளை கொடுமைப்படுத்தி, விதிகளை மீறுகின்றனர் என்ற குற்றச்சாட்டை மனுதாரர்கள் வைத்தால், முதலில் அவர்கள் விலங்குகள் நல வாரியத்தை அணுகி கோரிக்கை வைக்கட்டும் அல்லது வழக்கு பதியட்டும்.

மேலும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டு வந்த பின்னர் விதிமீறல் தொடர்பாக எந்தப் புகாரோ, வழக்கோ பதிவு செய்யப்படவில்லை. விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டு வந்தால், அதை விலங்குகள் நல வாரியம் கூறட்டும். மாறாக, பீட்டா அமைப்புக்கு அதுகுறித்து கூற, எந்த தார்மிக உரிமையும் இல்லை. அந்த அமைப்பு சட்டபூர்வமான அமைப்பும் இல்லை. எனவே, தற்போதைய நிலையில் ஜல்லிக்கட்டுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளன. விதிமீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எனவே, பீட்டா அமைப்பு கூறும் குற்றச்சாட்டுகள், ஆதாரங்களை கணக்கில் கொள்ள வேண்டியதில்லை. அவர்களிடம் வெறும் குற்றச்சாட்டை தவிர வேறு எதுவும் இல்லை. பீட்டா அமைப்பு கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் என்பது முறையானது அல்ல. அதன் நம்பகத்தன்மையை முதலில் ஆராய வேண்டும். குறிப்பாக அந்த அமைப்பின் குற்றச்சாட்டுகள் செய்தி அடிப்படையிலானது.

புதிய விதிகளின்படி, கண்காணிப்பு, காளைகளை ஆய்வு செய்வது, அதற்கென உரிய குழு அமைப்பது, ஜல்லிக்கட்டுக்கென தனி இடம் ஒதுக்குவது என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, ஜல்லிக்கட்டை ஏனோ தானோவென்று நடத்திட முடியாது. குறிப்பாக ஆட்சியர் அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், “ஜல்லிக்கட்டில் காளையானது அவிழ்த்து விட்ட உடன் குறிப்பிட்ட இடத்தில் ஓடுமா? அல்லது தாறுமாறாக ஓடுமா? அதனை எத்தனை பேர் அடக்குவர்?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில், "காளைகள் குறிப்பிட்ட இடத்தில் அவிழ்த்து விடப்படும். 15 மீட்டர் தூரம் ஓடும்போது, அதன் திமிலை பிடித்து ஒருவர் தான் அடக்குவார். அதுவும் 10 முதல் 15 வினாடிகள் மட்டுமே அதன் திமிலை கொட்டியாக பிடித்து தொங்குவார். அந்த 15 மீட்டர் தாண்டிய பின்னர், காளையை யாரும் தொட மாட்டார்கள். அதன்பின்னர் சுமார் 100 மீட்டர் தூரம் களை ஓடும், அந்தப் பகுதியில் வைத்து காளையின் உரிமையாளர் அல்லது பயிற்சியாளர் அந்தக் காளையை பிடித்து வேறு வழியாக வெளியே அழைத்து செல்வர்" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "ஒரே நேரத்தில் எத்தனை காளை அவிழ்த்து விடப்படும்? 15 மீட்டர் அரங்கத்தை விட்டு காளை வெளியே செல்லும். இடத்தில் சிசிடிவி கேமரா உள்ளதா? எங்கெங்கு சிசிடிவி கேமரா வைக்கப்படும்? அவிழ்த்து விடப்பட்ட காளைகள் மாடுபிடி வீரர்களை எதிர்த்து சண்டையிடுமா? காளை வாடிவாசலில் இருந்து வெளியே வரும்போது எத்தனை பேர் பிடிப்பர்? ஏனெனில், பல வீரர்கள் கலந்துகொள்ளும்போது எத்தனை பேர் காளையைப் பிடிப்பர்?" என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது தமிழக அரசு தரப்பில், "வாடிவாசலில் இருந்து காளை வெளியே வரும்போது, பலர் காளையை பிடிக்க முற்பட்டாலும் எவர் ஒருவர் திமிலை பிடிக்கிறாரோ, அவர் மட்டுமே அந்தக் காளையை அடக்க முற்படுவர். ஒருவரை தவிர்த்து வேறு எவரும் அதனைப் பிடித்து தொங்க மாட்டார்கள். ஒரு சமயத்தில் ஒரே ஒரு காளை மட்டுமே அவித்து விடப்படும். மேலும், காளைகளை எதிர்த்து சண்டையிடப்படாது. காளை ஒடும்போது அதன் திமிலை ஒருவர் பிடிப்பர். மேலும் அந்த அரங்கின் பல இடங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்படும். அதனை நிகழ்ச்சி கண்காணிப்பாளர்கள் உறுதி செய்வர்" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "காளையை அவிழ்த்து விடும்போது ஒருவர் மட்டுமே காளையைப் பிடிக்க வேண்டும் என விதி எங்கு உள்ளது? அவ்வாறான விதி குறிப்பிடப்படவில்லை என்றால், ஒருவேளை பலர் காளையை ஒரே சமயத்தில் அடக்க பாய்ந்தால் அதிகாரிகள் என்ன செய்வார்கள்?" என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு தரப்பில், "அனைத்தையும் பட்டியலிடப்படவில்லை என்றாலும், ஒருவர் மட்டுமே காளையைப் பிடிப்பர் என்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் ஒருவரே பிடிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக அங்கு அறிவிக்கப்படும்" என்று பதிலளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "அவ்வாறு ஒருவரே காளையைப் பிடிக்க வேண்டும் என்று விதியில் கூறவில்லை என்றால்? இதனை அப்படியே நாங்கள் அனுமதித்தால் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது எனக் கூறி ஒரே சமயத்தில் பலர் காளை மீது அதனை அடக்க பாய்வார்களே?" என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு தரப்பில், "ஒருவேளை ஒரு காளையை பிடிக்க ஒருவருக்கு மேல் முற்பட்டால் அந்த நபர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். இதுதான் காலங்காலமாக உள்ள எழுதப்படாத விதி, அது கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. பல போட்டியாளர்கள் இருந்தாலும், ஒருவரே காளையை அடக்க முயல்வர், பிறர் அந்தக் காளையை தொந்தரவு செய்ய மாட்டார்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "அப்படியெனில் ஒருவர் மட்டுமே காளையைப் பிடிப்பர் என எழுத்துபூர்வமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து" என்று தெரிவித்தனர். அதற்கு தமிழக அரசு தரப்பில், "இந்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கூட உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "ஆடை கட்டுப்பாடு என்றால், அதனை அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் கொடுப்பார்களா? ஏனெனில் அந்த வீரர்கள் அணிந்திருக்கும் உடைகளில் புகைப்படம் உள்ளது" என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது தமிழக அரசு தரப்பில், "அரசியல்வாதிகள் மட்டுமல்ல, பல தனியாரும் ஸ்பான்சர் செய்வர். அதுமட்டுமல்ல தண்ணீர், பரிசுகள் என பலர் ஸ்பான்சர் செய்வர். இது அவர்களின் விளையாட்டு ஆகும். காளைகள் களத்துக்கு வருவதிலிருந்து முழுவதும் விடியோ பதிவு செய்யப்படுகிறது. அதன் தொகுப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமற்றது" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "மனிதர்களின் மகிழ்ச்சிக்காக விலங்குகளை பயன்படுத்த முடியுமா என்பதே நாகராஜ் வழக்கின் கேள்வி. மேலும் காளைகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது, எவ்வாறு பயிற்சி அழைக்கப்படுகிறது? எத்தனை வயது முதல் காளைகள் பயன்படுத்தப்படும்? எத்தனை வயதில் ஜல்லிக்கட்டு காளை ஓய்வு பெறும்? ஜல்லிக்கட்டு பண்பாட்டோடு ஒன்றிணைந்தது என்பதற்கு ஆதாரம் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு தரப்பில், "காளைகள் அதன் உடற்தகுதி , தோற்றத்தை வைத்து வாங்கப்படுகிறது. லட்சத்துக்கும் மேலாக பணம் கொடுத்து வாங்கப்படுகிறது. 18 மாதங்கள் முதல் 6 வயது வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும். அதன்பின்னர் அந்த காளை வீடுகளில் வளர்ப்பர். வெளிநாட்டில் (ஸ்பெயின்) இருப்பது போன்று கொல்லும் வழக்கம் கிடையாது. ஏனெனில் அந்த காளைகளை குடும்ப உறவு, உறுப்பினர் என்றே வைத்திருப்பர்" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "உலகில் உயிரோடு வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் கண்ணியத்துடன் வாழ உரிமை உள்ளது. அதனைப் பயமுறுத்தி, துன்பப்படுத்தி ஒரு காரியத்தை திணிக்க முடியாது. குறிப்பாக விலங்குகளை மனிதர்களின் மகிழ்ச்சிக்காக பொம்மைகளாக பன்படுத்த முடியாதே?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில், "ஒரு வீட்டு விலங்கை பழக்க வேண்டுமெனில் சில கஷ்டமான பயிற்சிகள் வழங்க வேண்டும், இல்லையேல் அவற்றை பல வேலைகளுக்கு பயன்படுத்த முடியாது" என்று பதிலளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "அப்படியெனில் தேவையில்லாத துன்பம் கொடுக்கக் கூடாது என்று எடுத்துக்கொள்ளலாமா?” என்றனர். அதற்கு தமிழக அரசு, "நிச்சயமாக, அதேவேளையில் விலங்குகளை பழக்க சில கடுமையான பயிற்சிகள் கொடுக்க வேண்டியது வரும், அதை துன்பப்படுத்தல் என கூற முடியாது" என்று கூறியது.

நீதிபதிகள், “ஜல்லிக்கட்டு ஒரு கேளிக்கைக்கான விளையாட்டா?” என கேட்டதற்கு, "ஜல்லிக்கட்டு வெறும் கேளிக்கை விளையாட்டு அல்ல. மனிதர்களின் மகிழ்ச்சிக்கான விளையாட்டு அல்ல, அது தமிழர் பண்பாடோடும், கலாச்சாரத்தோடும் இணைந்தது. இங்கு காளைகள் வேண்டுமென்று துன்பப்படுத்தும் கலாச்சாரம் இல்லை. ஜல்லிக்கட்டு தொடர்பான அரசியல் சாசன அமர்வின் விசாரணை நிறைவடைந்த பின்னர், இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண நீதிபதிகள் நேரில் வர வேண்டும்.

இந்த ஜல்லிக்கட்டு காளைகள் பெரும் வருமானம் ஈட்டும் விலங்கு அல்ல. மாறாக, அவை இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஜல்லிக்கட்டுக் காளைகள் அந்த மண்ணின் நாட்டு மாடுகள் ஆகும். எனவே, நாட்டு மாடுகள் இனத்தை காப்பாற்ற இவை பயன்படுத்தப்படுகின்றன.

இந்த விளையாட்டு கடந்த 5000 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது காளைகள் ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்த தகுதி இல்லை என முந்தைய நாகராஜ் வழக்கில் கூறுவது எவ்வாறு ஏற்க முடியும். காயம்பட்ட காளைகள், கொம்பு முறிந்த காளைகள் என உடற்தகுதி இல்லாத காளைகள்தான் தகுதி இல்லாதவை. மேலும் நாகராஜ் வழக்கின்போது பல்வேறு விதிகள் இல்லை, ஆனால் தற்போது அவ்வாறு இல்லை.

மேலும், ஜல்லிக்கட்டு விளையாட்டு அபாயகரமானது என்று கூறினால் குத்துச்சண்டை, ரக்பி, அமெரிக்கன் கால்பந்து, கிரிக்கெட் என அனைத்து விளையாட்டும் அபாயமானது தான். விளையாட்டில் விருப்பம் உள்ளவர்கள் விளையாடுகின்றனர், யாரும் நிர்பந்தம் செய்யப்படுவதில்லை. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது மிக அபாயகரமானதுதான். ஆனால் அதற்காக எவரெஸ்ட் சிகரத்தை ஏறாமல் இருக்கிறார்களா? விளையாட்டு என்றாலே அதில் சில ஆபத்து இருக்கத்தான் செய்யும். அதற்காக அனைத்தையும் தடை விதித்து விட முடியாது" என்று தமிழக அரசு பதிலளித்தது.

அப்போது நீதிபதிகள், "ஜல்லிக்கட்டு போட்டியில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் காளைகளுக்கு துன்புறுத்துவதாக இருக்கிறது என விலங்குகள் அமைப்புகள் குற்றம் சாட்டுகிறதே" என்று கேள்வி எழுப்பினர். அப்போது தமிழக அரசு, "அப்படி என்றால் திருமணங்களிலும் திருவிழாக்களிலும் கூட தான் அதிக அளவில் ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அங்கெல்லாம் கூட குதிரைகளும் யானைகளும் பயன்படுத்தப்பட்டு கொண்டு தானே இருக்கிறது. அதேபோல இதய நோயாளிகளும் அந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்கின்றனரே? ஜல்லிக்கட்டு காளைகள் என்பது வெறும் விளையாட்டுக்காக மட்டுமல்லாமல், அதனுடைய நலனுக்காகவும் தான் வளர்க்கப்படுகிறது.

5000 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாச்சார நிகழ்வை பொய்யையும் அவதூறையும் கூறி நிறுத்த பார்க்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதை உயர் நீதிமன்றமும் கண்காணிக்கிறது. போட்டிகள் நடக்கும்போது முழுமையாக அதனை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படுகின்றது. மாவட்ட ஆட்சியர் கண்காணிக்கிறார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் களத்திலிருந்து ஆய்வு செய்கிறார். இவை அனைத்தும் நடந்தும், எப்படி விதிமுறை மீறப்படுகிறது என்று கூறும் வாதத்தை ஏற்றுக் கொள்வது?” என்று வாதிட்டது.

அப்போது நீதிபதிகள், "ஒருவேளை ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தம் கொண்டு வரவில்லை என்றால், இந்த விளையாட்டு என்பது குற்றமா? அப்படியெனில் என்ன நடந்திருக்கும்?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு, "ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு இருந்தால், நாட்டு மாடுகள் இனம் அழிந்து போகும் நிலை ஏற்பட்டிருக்கும் அல்லது அவற்றின் எண்ணிக்கை மிக மிக குறைந்திருக்கும். ஜல்லிக்கட்டை ஒரு வெறுக்கத்தக்க விளையாட்டாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். காளைகள் அதன் உண்மையான குணத்தில் இருந்து வலுக்கட்டாயமாக மாற்றப்படுகின்றன என கூறுகின்றனர்.

ஆனால், வன விலங்குகள் கூட அதனை பாதுகாக்க, அதன் நன்மைக்காக மனிதர்கள் பிடியில் வைக்கப் பழக்கப்படுகிறது. இது எதற்காக என்றால் அதன் இனத்தை பாதுகாக்க, எடுத்துக்காட்டாக புலி, சிறுத்தை உள்ளிட்டவை இனப்பெருக்கத்துக்காக பாதுகாக்கப்படுகின்றன. எனவே, குணத்தில் இருந்து மாற்றுவது என்பது கடினமான வழிமுறைதான், ஆனால் அந்த விலங்கின் நன்மைக்காக அதனை பழக்கப்படுத்துவது என்பதை எவ்வாறு கொடுமை என கூற முடியும்?”என்று தெரிவித்தது.

அப்போது நீதிபதிகள்,“வாடிவாசலில் இருந்து காளை வெளியே வரும்போது எத்தனை நொடிகள் மாடுபிடி வீரர்கள் அதனை பிடித்து வைப்பர்?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு, “மூன்று முறை காளை குதிக்கும். அந்த மூன்று முறை குதிக்கும்போது எவர் ஒருவர் அதன் திமிலை கெட்டியாக பிடித்து தொங்குகின்றனரோ அவர் வெற்றி பெற்றவர். அதே வேளையில் முதல் குதியில் வீரர் தூக்கி எறியப்பட்டால், காளை வென்றதாக அறிவிக்கப்படும். அந்தக் காளையை வேறு எவரும் அடக்க முற்பட மாட்டார்கள். அந்த காளை நேராக அந்த அரங்கத்தை விட்டு வெளியேறும் வழிக்குச் சென்றுவிடும். இந்த நடைமுறையை தான் கொடுமைப்படுத்துவது என்பதா? இந்த நடைமுறையில் எங்கு காயப்படுத்தப்படுகிறது? உயர் நீதிமன்றக் குழு, அரசின் உயர்மட்ட குழு, விலங்கள் நல வாரியத்தின் குழு என 3 குழுக்கள் ஜல்லிக்கட்டை கண்காணிக்கின்றன” என்று வாதிடப்பட்டது.

முன்னதாக, வழக்கில் ஜல்லிக்கட்டு நடைபெறும் முறை, அரங்கம், வாடிவாசலில் இருந்து காளைகள் வருவது, வீரர்கள் எவ்வாறு பிடிக்கின்றனர் ஆகியவை தொடர்பாக நீதிபதிகள் புரிதலுக்காக ஒரு சிறிய தொகுப்பை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்வதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து, ஜல்லிக்கட்டு வழக்கின் அடுத்த விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x