40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்; மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணி: ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னையில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்
Updated on
2 min read

சென்னை: வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் வலுவான கூட்டணி அமைக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திமுக மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்கு, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்களில் ஒருவரான அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவர் பங்கேற்கவில்லை. மற்ற அனைவரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறை வைப் போற்றும் வகையில், பள்ளிக்கல்வித் துறை செயல்படும் டிபிஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் வளாகம் என்று பெயர் சூட்டியதுடன், சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருதுவழங்கப்படும் என்றும் அறிவித்தமைக்காக முதல்வருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி வரும் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 17-ம் தேதி கவியரங்கம், 18-ம் தேதி வடசென்னையில், மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம், பேராசிரியர் பிறந்த நாளான டிச. 19-ம் தேதி மாநிலம் முழுவதும் அன்பழகன் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்துவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதில், பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் மூத்த அமைச்சர்கள் பேசினர். அமைச்சர்கள் பேசும்போது, “அதிமுக மூன்றாகப் பிரிந்துள்ள நிலையில், திமுக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. எனவே, கவனமாக செயல்பட வேண்டும். பூத் ஏஜென்ட்களை நியமிக்க வேண்டும். அரசுக்கு எதிரான வாக்குகளை நம் பக்கம் வரச் செய்யும் வகையில், திட்டங்களை மக்களிடம்கொண்டு சேர்க்க வேண்டும்” என்றனர். தொடர்ந்து, மாவட்டச் செயலாளர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். மகளிருக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1,000 உறுதித்தொகை வழங்குவது, தொகுதி நிலவரம், கூட்டணி கட்சிகள் குறித்து அவர்கள் பேசினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம். இந்த முறை 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். அதற்கான கட்டமைப்பை உருவாக்குங்கள். வலுவான கூட்டணியுடன்தான் நாம் போட்டியிடுவோம். கூட்டணி தொடர்பாக, தேர்தல் நேரத்தில் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அடிப்படைப் பணிகளை மேற்கொள்ளுங்கள்.

பூத் கமிட்டி அமைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். நன்கு பணியாற்றக்கூடிய இளைஞரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் அதிக அளவில் இடம் பெற வேண்டும். திமுகவில் முன்பு21 அணிகள் இருந்த நிலையில்,தற்போது 23 அணிகள் உள்ளன.இந்த அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அணிக்கும் தனித்தனியாக மாவட்ட அளவிலான நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். அப்போது, நிர்வாகிகள் மட்டுமே 15 லட்சம் பேர் இருப்பார்கள். அதன் மூலம் கட்சி வலுப்பெறும். நன்கு பணியாற்றுவோருக்கு பதவி கிடைக்கும். மாநில அரசின் திட்டங்கள், கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகிறதா என்பதைக் கண்காணித்து அதன்படி செயல்படுங்கள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in