Published : 01 Dec 2022 03:49 PM
Last Updated : 01 Dec 2022 03:49 PM

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் | குளிர்கால ராபி பருவப் பயிர்களை காப்பீடு செய்க: வேளாண் துறை

கோப்புப்படம்

சென்னை: நடப்பு 2022 - 2023ஆம் ஆண்டில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (PMFBY) சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில், இதுவரை 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு 33 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள தகவல்: மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், விவசாயிகள் சார்பாக காப்பீட்டுக் கட்டணத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை ஒதுக்கி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

நடப்பாண்டில் இதுவரை காப்பீடு செய்யப்பட்டுள்ள பரப்பு: நடப்பு 2022 - 2023ஆம் ஆண்டில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (PMFBY) சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில், இதுவரை 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு 33 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு மற்றும் குளிர்காலப் பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு: நடப்பாண்டில், சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்ய கீழ்க்கண்டவாறு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

> சிறப்பு பருவ சம்பா நெல் பயிர்களை, திண்டுக்கல், கன்னியாகுமரி, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்கள் டிசம்பர் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம்.

> குளிர்கால (ராபி) பருவ பயிரான சோளத்தை கரூர், சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், கோயம்புத்தூர் மாவட்டங்கள் டிசம்பர் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம்.

> குளிர்கால (ராபி) பருவ பயிரான நிலக்கடலையை திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை மாவட்டங்கள் டிசம்பர் 15-ம் தேதிக்குள்ளும், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், தர்மபுரி, ராமநாதபுரம், நாமக்கல் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், சிவகங்கை, டிசம்பர் 31-ம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்யலாம்.

> குளிர்கால (ராபி) பருவ பயிரான மக்காச்சோளம்-III ஐ, தேனி, தருமபுரி, திருநெல்வேலி மாவட்டங்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள்ளும் , கம்பு பயிரை தூத்துக்குடி மாவட்டமும், ராகியை தருமபுரி மாவட்டமும், சூரியகாந்தியை தூத்துக்குடி , ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களும், எள்ளை தூத்துக்குடி மாவட்டமும், பருத்தி-III ஐ தருமபுரி மாவட்டமும், டிசம்பர் 31-ம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்யலாம்.

தேவையான ஆவணங்கள்: விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் போன்ற ஆவணங்களையும் இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ள வேண்டும். பயிர் காப்பீட்டுக் கட்டணத் தொகையில், பெரும்பாலான பங்குத் தொகை மாநில, ஒன்றிய அரசுகள் செலுத்திவிடும் என்பதால், விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

எனவே, எதிர்பாராமல் இயற்கை பேரிடர், பூச்சிநோய் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டால், விவசாயிகளை பாதுகாப்பதற்காக, ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீட்டில் அரசு செயல்படுத்திவரும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீட்டுக் கட்டணத்தை (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x