Published : 01 Dec 2022 07:46 AM
Last Updated : 01 Dec 2022 07:46 AM

தமிழர்கள் நிம்மதியாக வாழ அரசு இயன்றதை செய்யும்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழர்கள் அனைவரும் நிம்மதியுடன் வாழ, திமுக அரசு இயன்ற அனைத்தையும் செய்யும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சியினருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையும் உயர, அனைத்து மாவட்டங்களும் சமச்சீரான வளர்ச்சியைப் பெற வேண்டும். இதற்காக மாவட்டந்தோறும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் திராவிட மாடல் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பெரம்பலூர், அரியலூரில் தொழில் பூங்காக்களை உருவாக்கவும், திட்டங்களை தொடங்கி வைக்கவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் சென்றபோது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, தொண்டர்களின் பாசத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.

நவ.28-ல் திருச்சி சென்றபோது, ஏர்போர்ட், கே.கே. நகர் பகுதி மக்கள், ஓலையூருக்கு பேருந்து சேவைகேட்டனர். அமைச்சர் சிவசங்கரிடம் கூறி, அன்றே கட்டணமில்லா பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

காட்டூர் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ‘வானவில் மன்றம்’ திட்டத்தை தொடங்கிவைத்தேன். மாநிலம் முழுவதும் 25 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், ரூ.25 கோடியில்100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகன செயல்பாட்டையும் தொடங்கிவைத்தேன்.

திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வழியெங்கும் மக்கள் தொடர்ச்சியாக நின்று, வாழ்த்து தெரிவித்தனர். அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைக்கும் ஆட்சியாக இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஒவ்வொரு தமிழரும் நிம்மதியுடன் வாழ திமுக அரசு இயன்ற அனைத்தையும் செய்யும் என்ற உறுதியுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவைத் திறந்துவைத்து, ரூ.5 ஆயிரம்கோடி முதலீட்டில், 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினேன். இதுதான் அந்த மாவட்டத்தின் முதல் தொழில் பூங்காவாகும்.

அங்கிருந்து அரியலூர் செல்லும் வழியில், கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெறும்அகழாய்வுப் பணிகளையும், பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையைக் காட்டும் பொருட்களையும் பார்வையிட்டேன். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ்.கார்த்திக் குடும்பத்தினர், குரும்பஞ்சாவடி திட்டப் பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்க, வீடு ஒதுக்கீட்டுக்கான ஆணையை வழங்கினேன்.

நவம்பர் 29-ல் அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.30.26 கோடியில் முடிவுற்ற 51 திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ.1.56 கோடியிலான 3 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். ரூ.78 கோடிமதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன். அரியலூரில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தேன்.

திமுக அரசுக்கு எதிராக, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட சங்கடங்களையும் குழப்பங்களையும் உருவாக்க, அரசியல் எதிரிகள் சதித்திட்டம் தீட்டி, வதந்திகளைப் பரப்ப நினைக்கின்றனர். நல்ல அரசைக் கெடுக்க நினைப்போரின் நயவஞ்சக எண்ணத்தை நசுக்கி, முனை மழுங்கச் செய்யும் பணிதிமுக தொண்டர்களுக்கு உண்டு. திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்களையும், வதந்திகளையும் புள்ளி விவரங்கள் மூலம் அறுத்தெறிய வேண்டும்.

திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, விளையாட்டு மேம்பாட்டு அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி உள்ளிட்ட 23 அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு வாய்ப்பின்றிப் போயிருக்கலாம். கிடைத்திருக்கும் வாய்ப்பு போதவில்லை எனசிலர் கருதலாம். உண்மையாக உழைப்பவர்களின் எதிர்பார்ப்பு, அடுத்தடுத்து நிறைவேறும்.

ஆரிய - திராவிட பண்பாட்டுப் போரில், திமுக தொடர்ந்து ஜனநாயக யுத்தத்தை நடத்தி வருகிறது. இனம், மொழி, மாநில உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள போரை நேர்மையாக எதிர்கொண்டு வருகிறோம். அதில் மகத்தான வெற்றி யும் பெற்றிருக்கிறோம்.

தமிழகத்தையும், இந்தியா முழுவதற்குமான ஜனநாயகத்தையும் பாதுகாக்க களம் காண வேண்டிய கடமை வீரர்களாக திமுகவினர் திகழ வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x