Published : 01 Dec 2022 06:47 AM
Last Updated : 01 Dec 2022 06:47 AM

மின் இணைப்புடன் 33 லட்சம் பேர் ஆதார் எண் இணைப்பு: சர்வர் மேம்படுத்தப்படாததால் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்துவதில் சிக்கல்

சென்னை: மின் இணைப்புடன் கடந்த 3 நாட்களில் 33 லட்சம் பேர் ஆதார்எண்ணை இணைத்துள்ளனர். மின்வாரியத்தின் சர்வர் திறன் மேம்படுத்தப்படாததால், ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்த முடியாமல் நுகர்வோர் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாடு மின்வாரியம் நுகர்வோர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியுள்ளது. ஆதார் எண்ணை இணைத்தால்தான் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தமுடியும் என மின்வாரியம் உத்தரவு பிறப்பித்தது.

இதனால், மின் நுகர்வோர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் மின்வாரிய இணையதளத்தில் சென்றுதங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதனால் மின்வாரிய இணையதளத்தின் சர்வர் முடங்கியது.

இதையடுத்து, கடந்த 28-ம் தேதி முதல் வரும் டிச.31-ம் தேதி வரை சிறப்பு முகாமை மின்வாரியம் நடத்துகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மின்வாரியத்தின் சர்வர் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆன்லைன் மூலம் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து நுகர்வோர் கூறும்போது, “ஆன்லைன் மூலம் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆனால், சர்வர் கோளாறு காரணமாக ஆதார் எண்ணை இணைக்க முடியவில்லை” என்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “மின்வாரியம் தனது சர்வரின் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணி விரைவில் நிறைவடையும். எனவே அதுவரை ஒருசில இடங்களில் பிரச்சினை இருக்கும். மேலும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தைக் கட்ட முடியும். எனவே, ஆன்லைனில் பணம் கட்டுவோர் முதலில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

அதே சமயம், மின்வாரியத்தின் பிரிவு அலுவலகங்களில் உள்ள சிறப்பு கவுன்ட்டர்களில் ஆதார் எண்ணை இணைக்காமலேயே மின்கட்டணத்தை செலுத்தலாம்.

இதற்கிடையில், சிறப்பு முகாம்களில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் 33 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x