Published : 22 Jul 2014 01:20 PM
Last Updated : 22 Jul 2014 01:20 PM

நீதிபதி கட்ஜு குற்றச்சாட்டுக்கு திமுக திட்டவட்ட மறுப்பு



ஊழல் நீதிபதியை திமுக ஆதரித்தது என்ற முன்னாள் நீதிபதி கட்ஜுவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "நீதிபதி கட்ஜு குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. அவரது குற்றச்சாட்டில் கட்சியின் பெயரையும், நீதிபதியின் பெயரையும் அவர் நேரடியாக தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், திமுக மீது இத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதற்கு சொந்த விருப்பு, வெறுப்புகளே காரணம்.

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளதால் இது குறித்து தலைவர் கருணாநிதியிடம் ஆலோசித்துள்ளோம். அவர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பார்" என்றார் டி.கே.எஸ்.இளங்கோவன்.

முன்னதாக, மர்கண்டேய கட்ஜ் வெளியிட்ட தகவல்:

"தமிழகத்தில் நேரடியாக மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், மாவட்ட நீதிபதியாக இருந்த கால கட்டத்தில் தவறு செய்ததற்காக அவருக்கு எதிராக எட்டு புகார்கள் வந்தன. அந்த எட்டு புகார்களையும் சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் அழித்துவிட்டார்.

பின்னர் அவர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நான் நவம்பர் 2004-ல் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றபோது அவர் அப்பதவியில் இருந்தார். அவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஆதரவு இருந்தது. அந்த தலைவருக்கு இவர் மாவட்ட நீதிபதியாக இருந்தபோது ஜாமீன் வழங்கியதால் இந்த ஆதரவு" என்று கட்ஜு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x