Published : 01 Dec 2022 06:51 AM
Last Updated : 01 Dec 2022 06:51 AM

மத்தியில் தமிழை ஆட்சிமொழியாக்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: முதல்வருக்கு மதிமுக அவைத் தலைவர் வேண்டுகோள்

சு.துரைசாமி

திருப்பூர்: மதிமுக அவைத் தலைவர் சு.துரைசாமி திருப்பூரில் நேற்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: மத்திய பாஜக அரசு இந்தியைத் திணிக்க பெருமுயற்சி எடுத்து வருகிறது. மத்திய அரசு சார்ந்த ரயில்வே, பொதுத்துறை வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், விமான நிலையங்கள், தபால் நிலையங்கள் என அனைத்து துறைகளிலும் இந்தியை புகுத்த, நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.

அண்ணா கொண்டுவந்த இருமொழிக்கொள்கை திட்டத்தின் பயனாகத்தான், தமிழக இளைஞர்கள் ஆங்கிலக் கல்வி அறிவுபெற்று, இன்றைக்கு தமிழகத்திலும் சரி, உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் சென்று உயர்ந்த நிலையில் உள்ளனர்.

ஆனால், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அந்த இடத்துக்குஇந்தியைக் கொண்டுவருவோம் என்று சொல்லும் மத்திய அரசாங்கம், குஜராத்திலும், பிஹாரிலும், மத்தியப்பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் ஆங்கிலத்தை ஏன் கட்டாயப் பாடமாக வைத்துள்ளனர்.

1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரைஅனைத்து பிரிவு பள்ளிகளிலும், அந்தந்த மாநில மொழிகள் கட்டாய பாடமாக இருக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில், இந்திய அரசாங்கத்தின் ஆட்சி மொழியாக, தமிழை சேர்க்க வேண்டும் என தீர்மானம் போட்டு, மத்திய அரசாங்கத்துக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.

பாஜகவாலேயே எதிர்க்க முடியாது: முதல்வருக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, இந்திபேசாத மாநிலங்களின் முதல்வர்களின் கூட்டத்தை கூட்டி, அந்தந்த மாநில மொழியும், மத்தியில் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்படி கொண்டுவந்தால், அந்தந்த மாநிலத்தில் இருக்கும் பாஜகவாலேயே எதிர்க்க முடியாது. ஒருவேளை எதிர்த்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை மாநில மக்கள் புறக்கணிப்பார்கள். இந்தி பேசாத மாநிலங்களில் மாநில கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றினால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x