

சேலம்: சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 3 மாதத்தில் 36 மணி நேரத்தில் 12 கொலைகள் நடந்த சம்பவம் மூலம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை தெரிந்து கொள்ளலாம். சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கையில், தமிழகம் முழுவதும் 2,138 நபர்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்கள் கைது செய்யப்படாததற்கு ஆளுங்கட்சியினரின் தலையீடு காரணம் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ராமநாதபுரம் அருகே போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதும், அதில் திமுக பிரமுகருக்கு தொடர்பு இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட முடிவுற்ற திட்ட பணிகளை மட்டுமே தற்போதைய திமுக அரசு திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது. அதேநேரம், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக், அம்மா சிமென்ட், பெண்களுக்கான மானிய விலையில் இருசக்கர வாகனம், மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம், திருமணமான பெண்களுக்கான தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தற்போதைய திமுக அரசால் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக செய்து கொடுத்திருக்கிறோம். அதை நான் பட்டியலிட்டு பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாராக உள்ளேன். கடந்த 19 மாத கால திமுக ஆட்சியில் நீங்கள் நிறைவேற்றிய திட்டங்கள் என்ன?, அதனால் மக்கள் அடைந்த பயன் என்ன? என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளாரா? என்பதை தெரிவிக்க வேண்டும். இதற்கு பொது மக்களே தீர்ப்பளிக்கட்டும். இவ்வாறு அவர் பேசினார்.