

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் சைகை மொழிப் பாடம் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகியின் நூற்றாண்டு தொடக்க விழா சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரிவளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளூவர் சிலையைதிறந்து வைத்தார். மேலும், அன்னைஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு சிறப்பு மலர், ஜானகியின் ஆவணப்பட குறுந்தகடு, எம்ஜிஆர் வாழ்க்கை நூல் ஆகியவற்றையும் வெளியிட்டார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகிதான். அவரது நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது பெருமையாக உள்ளது. வரலாறு அடிப்படையில் சிந்திப்பவர்களுக்கு இந்நிகழ்வு அதிர்ச்சி தராது. ஏனெனில், எம்ஜிஆர் 20 ஆண்டுகள் திமுகவில் இருந்தார்.
திமுகவின் சமூக, சமத்துவ, பொதுவுடமை கருத்துகளை திரைப்படம் வாயிலாக மக்களிடம் கொண்டு சென்றார். காலத்தின் சூழலால் அதிமுக எனும் ஒரு தனி இயக்கத்தை தொடங்கினார். அந்த இயக்கத்திலும் அவரது பங்களிப்பு 15 ஆண்டுகள்தான். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது எனது கடமையாகும்.
இந்த கல்லூரி தொடங்குவதற்கு 1991 முதல் 1995-ம் ஆண்டு வரை ஜானகியால் அனுமதி பெற முடியாமல் இருந்தது. அதன்பின் திமுகஆட்சி வந்ததும் இந்த கல்லூரிக்கு அனுமதி வழங்கி, இது உருவாகக் காரணமாக இருந்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. அதேபோல், எம்ஜிஆர் என் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர். அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்குகிடைத்தது. நன்றாக படிக்க வேண்டுமெனவும் எனக்கு அவர் அறிவுறுத்தினார்.
நூற்றாண்டு விழா காணும் ஜானகி தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கியவர். பரதநாட்டியம், மணிப்பூரி, சிலம்பம், கத்தி சண்டை உட்பட பல்வேறு தனித்திறன்களை பெற்றவர். தமிழ், மலையாளம் உட்பட 6 மொழிகள் அறிந்தவர். எம்ஜிஆர் போல் கொடைத்தன்மை கொண்டவர். திரையுலகில் மட்டுமல்ல அரசியலிலும் அவருக்கு பக்கபலமாக இருந்தார்.
சைகை மொழியை பள்ளி, கல்லூரிகளில் மொழிப் பாடமாக வைக்க வேண்டும் என்று எம்ஜிஆர் ஜானகி கல்லூரி தாளாளர் லதாராஜேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கை செயல்திட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எம்ஜிஆர் தனி இயக்கத்துடன் செயல்பட்டாலும் அண்ணாவின் கொள்கையை கட்டிக் காத்தார்.திராவிட கொள்கைகளைக் காப்பதும், அதன் மூலமாக தமிழகத்தை மேம்படுத்துவம்தான் எம்ஜிஆர்-ஜானகிக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்ரமணியன், சு.முத்துசாமி, ஆர்.சக்கரபாணி, எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் தலைவர் குமார் ராஜேந்திரன், தாளாளர் லதா ராஜேந்திரன்உட்பட பலரும் கலந்து கொண்டனர்.