

தமிழகத்தில் முறைகேடாக பதுக்கி வைத்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.60 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் செய்யப்படுவதாக கடந்த நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள், அதை பல்வேறு வழிகளில் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பிடிப்பதற்காக வருமான வரித்துறை மற்றும் அம லாக்கத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், முறைகேடாக புதிய 2 ஆயிரம் நோட்டுகளை பெற்று பதுக்கி வைத்திருந்தவர்கள் பிடிபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அமலாக்கத்துறை இயக்குநர் கர்னல் சிங் கூறும்போது, ‘‘புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் தேவை அதிக மாக இருக்கிறது. இதனால், முறை கேடாக பதுக்கி வைத்திருந்த வர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டு, பின்னர் உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது’’ என்றார்.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் தமிழகத்தில்தான் அதிகமான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்த படியாக கர்நாடகத்தில் பிடிபட்டுள் ளது. தமிழகத்தில் மட்டுமே ரூ.60 கோடிக்கும் அதிகமான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் சுமார் ரூ.2 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கின.
அதையடுத்து அதிகபட்சமாக பஞ்சாப் மாநிலத்தில் கல்வி நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ.47 லட்சத்துக்கும் கொல்கத்தாவில் ஒருவரிடம் ரூ.21 லட்சத்துக்கும் தானே மற்றும் நாசிக் பகுதிகளில் இருந்து ரூ.50 லட்சம் அளவுக்கும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் அரசு கருவூலம் மற்றும் வங்கிகளில் செலுத்தப்பட்டு உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.