

சேலம்: புத்தக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, சேலம் புத்தகத் திருவிழா வரும் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் கடந்த 20-ம் தேதி, 200-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் புத்தகத் திருவிழா தொடங்கியது. தினமும் கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடந்த நிலையில், நேற்றுடன் (30-ம் தேதி) புத்தகத் திருவிழா நிறைவடைய இருந்தது.
இதனிடையே, புத்தகத் திருவிழாவுக்கு வந்து சென்ற பலரும், தாங்கள் விரும்பிய புத்தகங்கள், புதிதாக வெளியிடப்பட்ட புத்தகங்கள் ஆகியவற்றை வாங்க வேண்டியிருந்ததால், புத்தகத் திருவிழாவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், மக்கள், புத்தக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, புத்தகத் திருவிழாவை வரும் 4-ம் தேதி வரை நீட்டித்து, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.