ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 2-ம் நாளாக போராட்டம்

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2-ம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2-ம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

ஈரோடு / நாமக்கல்: ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் 132 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். இவர்கள், தூய்மைப்பணி, பாதுகாப்பு பணி மற்றும் நோயாளிகளை அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

இவர்களுக்கு, தினமும் ரூ. 707 வீதம் மாதம், ரூ. 21 ஆயிரம் சம்பளமாக வழங்க வேண்டும். ஆனால், ஒப்பந்த நிறுவனமோ தினமும் ரூ. 280 வீதம் மாதம் ரூ. 8,400 மட்டுமே வழங்கி வருகிறது. அரசு நிர்ணயம் செய்த சம்பளத்தை வழங்க வேண்டும். ஓய்வு அறை, வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கைகள் தொடர்பாக, தொழிலாளர் நலத்துறை அலுவலர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், அரசு அறிவித்த சம்பளத்தை வழங்க வலியுறுத்தி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன் தினம் இரவு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இரண்டாம் நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறிவித்துள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாமக்கல்: இதே கோரிக்கையை வலியுறுத்தி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இக்கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in