எம்ஜிஆர், ஜானகிக்கு வெண்கலச்சிலை: ஓ.பன்னீர்செல்வம் தகவல்
சென்னை: மறைந்த முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகியின் 100-வது பிறந்தநாள் விழா தொடக்கத்தை முன்னிட்டுஎம்ஜிஆர், ஜானகி ஆகியோருக்கு தியாகராயநகரில் உள்ள நினைவு இல்லத்தில் வெண்கலச் சிலை வைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: எம்ஜிஆரோடு பல திரைப்படங்களில் நடித்த ஜானகி, அவரை கரம் பிடித்த நாளிலிருந்து இறுதி வரை அவருடைய திரைப்பட வெற்றிக்கும், அரசியல் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தார்.
தமிழக மக்களின் நலன்களுக்காக அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை எம்ஜிஆர் ஆரம்பித்தபோது, சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை கட்சிக்காக கொடுத்த வள்ளல் அவர். தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையும் அவரையே சாரும்.
சென்னை, தியாகராய நகர், ஆற்காடு சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில், உரிய அனுமதி பெற்று, எம்ஜிஆர், வி.என். ஜானகி ஆகியோருக்கு முழு உருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
