

சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கருணாநிதி நினைவிடத்தில் மவுன போராட்டம் நடத்த பேரணியாகச் சென்ற 51 அரசு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஊதிய உயர்வுகோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில்உள்ள கருணாநிதி நினைவிடத்தில் கோரிக்கை மனு வைத்து மவுனபோராட்டம் நடத்துவதற்காக திருவல்லிக்கேணியில் உள்ளகஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் இருந்து சட்டப் போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள்பிள்ளை உள்ளிட்ட 51 மருத்துவர்கள் பேரணியாகப் புறப்பட்டனர்.
சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி,அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். பின்னர், பெருமாள் பிள்ளை உள்ளிட்ட சில நிர்வாகிகளை சுகாதாரத் துறைச் செயலருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்துச் சென்றனர்.
இப்போராட்டம் தொடர்பாக பெருமாள் பிள்ளை கூறும்போது, “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், இன்னும் கோரிக்கை நிறைவேறவில்லை.
ஆணை 354-ன்படி அரசு மருத்துவர்களுக்கு உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வில் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். தொடர்புடைய அரசுஅதிகாரிகளின் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும். சட்டப்போராட்டக் குழுவின் நிர்வாகிகள் 3 பேருக்கு கொடுக்கப்பட்ட குற்றக்குறிப்பாணையை ரத்து செய்யவேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும். அதற்காக நாங்கள் சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.