

சென்னை: எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல் தகுந்த மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்தி, அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என உலக எய்ட்ஸ் நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட உலக எய்ட்ஸ் நாள் 2022 செய்தி:
மக்களிடையே எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக எய்ட்ஸ் நாளின்கருப்பொருள் “சமப்படுத்துதல்" என்பதாகும். இந்தக் கருப்பொருளைச் சிறப்பாக செயல்படுத்த, குறிப்பாக, எச்ஐவி தொற்றால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, சமப்படுத்தும் பாங்கையும், எய்ட்ஸ் பரவலைக் குறைப்பதையும் உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.
எச்ஐவி தொற்றின் அளவு.. எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டங்களை மாநில அரசும்அரசு சாராத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து ஈடுபாட்டுடன் செயல்படுத்தியதால், தமிழகத்தில் எச்ஐவி தொற்றின் அளவு தற்போது 0.18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் தொற்றை மேலும் குறைக்கத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை இச்சமூகத்தில் எவ்வித பாகுபாடுமின்றி, மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்தி அவர்களுக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.